நிகில் கல்ராணியை தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்க முடியவில்லை. இதுகுறித்து கேட்டால், கொரோனா காலகட்டத்தில் பல விஷயங்கள் தலைகீழாக மாறிவிட்டதாகவும் இடைப்பட்ட காலத்தில் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தியதாகவும் பதில் வருகிறது.
"'இடியட்', 'ராஜவம்சம்' என நிக்கி கல்ராணி நடிப்பில் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அதன் பிறகு தமிழில் கூடுதல் கவனம் செலுத்துவாராம்.
"நான் மருத்துவராக வேண்டும் என்பதுதான் பெற்றோரின் கனவாக இருந்தது. பல பேட்டிகளில் இதைக் குறிப்பிட்டுள்ளேன்.
"எனக்கு விருப்பம் இல்லாததால் 'மாடலிங்' துறையில் கவனம் செலுத்தினேன். பின்னர் அதே வேகத்தில் சினிமா துறைக்கும் வந்துவிட்டேன்.
"உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஏதாவது பெரிதாகச் சாதிக்க வேண்டும், முன்னிலை கதாநாயகி ஆக வேண்டும் என்றெல்லாம் நான் ஆசைப்பட்டதே இல்லை. ஒரு நடிகையாக என் பயணம் இன்று வரை நீடித்ததே பெரிய விஷயம் என்று அடிக்கடி தோன்றும்.
"இப்போதும்கூட சினிமாவில் எனக்கென இலக்குகள் இருந்ததில்லை. ஆனால், சில சமயங்களில் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் எனும் ஆசை அண்மைக்காலமாக அவ்வப்போது மனதில் எட்டிப்பார்க்கிறது," என்கிறார் நிகில் கல்ராணி.
'இடியட்' படத்தில் இவரும் 'மிர்ச்சி' சிவாவும் இணைந்து நடித்துள்ளனர். தொடக்கம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியும் நகைச்சுவை கலந்த ரகளையாக இருக்குமாம்.
படப்பிடிப்பின்போது நிறைய வேடிக்கையான, ஜாலியான சம்பவங்கள் நடந்ததாகச் சொல்கிறார்.
"இந்தப் படத்தில் ஊர்வசி மேடம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஏற்கெனவே மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளேன். எல்லோரையுமே கிண்டல் செய்வார். மனதில் ஒன்றும் வைத்துக்கொள்ளாமல் இயல்பாகப் பழகுவார். அவர் நாயகியாக நடித்தபோது நடந்த சம்பவங்களை விவரிக்கும்போது சுவாரசியமாக இருக்கும்.
"'ராஜவம்சம்' படத்தைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவைச் சேர்ந்த பாதிப் பேர் நடித்திருப்பதாகச் சொல்லலாம்.
"ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் பிரம்மாண்டமாக இருக்கும்," என்று சொல்லும் நிக்கி கல்ராணி, தற்போது மலையாளத்தில் நடிகர் அர்ஜுனுடன் 'விருன்னு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அர்ஜுனிடம் இருந்து நடிப்பு குறித்த பல பயனுள்ள விஷயங்களைக் கற்றுக் கொண்டதாகவும், அவர் மிக எளிமையான நடிகர் என்றும் கூறுகிறார் நிக்கி கல்ராணி.