நடிகர் ரஜினி தனது அடுத்த படத்துக்கான சம்பளத்தை முப்பது விழுக்காடு அளவுக்கு குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமக்கு நெருக்கமான சிலரிடம் இதுகுறித்து அவர் கலந்தாலோசித்ததாக தெரிகிறது. 'அண்ணாத்த' படத்தின் வசூல் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததே இதற்குக் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவுகிறது.
எனினும், ரஜினி அப்படியெல்லாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் இது வெறும் வதந்தி என்றும் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
.
கல்யாணி பிரியதர்ஷன் (படம்) நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியீடு காண உள்ளன. சிம்புவுடன் அவர் நடித்துள்ள 'மாநாடு' படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இது தவிர, மலையாளத்தில் 'ஹிருதயம்', 'அரபிக்கடலிண்டே சிம்ஹம்' ஆகிய இரு படங்களும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. இவற்றின் வெற்றி தோல்வியைப் பொறுத்தே அடுத்தடுத்த படங்களை ஒப்புக்கொள்வது எனும் முடிவில் உள்ளாராம் கல்யாணி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் மொத்தம் ஏழு வில்லன்களாம்.
இவர்களில் முதன்மை வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்ற அனைவரும் அவரது உடன்பிறந்தவர்களாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
ஏழு பேரில் ஒருவராக மூத்த நடிகர் டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் கணேஷ் ஒப்பந்தமாகி உள்ளார்.