நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர 'பிக்பாஸ் 5' நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்று சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். தற்போது சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இவர் மீண்டும் 'பிக்பாஸ் 5'
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
திரைப்படங்கள் ஒரு பக்கம் 'ஓடிடி' பக்கம் சென்று கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கம் 'ஓடிடி' தளத்திற்கென்றே படங்களும் தயாராகின்றன. சமுத்திரகனி நடித்த 'விநோதய சித்தம்' படத்தைத் தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் 'சித்திரை செவ்வானம்' என்ற படம் 'ஓடிடி' தளத்திற்கென்று தயாராகி உள்ளது.
இது தந்தை, மகளுக்கு இடையிலான உறவைப் பற்றியது. தந்தையாக சமுத்திரகனியும் மகளாக பூஜா கண்ணனும் நடித்துள்ளனர். நடிகை சாய் பல்லவியின் தங்கைதான் பூஜா. இவர் அறிமுகமாகும் முதல் படம் டிசம்பர் 5ஆம் தேதி ஜீ5 'ஓடிடி' தளத்தில் வெளியாகிறது.
'வெண்ணிலா கபடி குழு' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'காடன்' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்து 'எப்.ஐ.ஆர்' படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் சுவரொட்டிகள், முன்னோட்டக் காட்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டி உள்ளன. எனவே படத்துக்குப் போட்டி உருவாகி உள்ளது. படத்தை 'ஓடிடி'யில் நேரடியாக வெளியிட ரூ.30கோடிக்கு கேட்டுள்ளனர். ஆனால் விஷ்ணு விஷால் திரையரங்கில்தான் வெளியிடுவேன் என்ற முடிவுடன் இருக்கிறார். இந்தப் படத்தின் இந்தி மறுபதிப்பு உரிமை மட்டும் ரூ.8 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
கமல்ஹாசனின் 'பஞ்சதந்திரம்' படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கைகலா சத்ய நாராயணா.
தெலுங்கில் 750க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக 2019ல் வெளியான மகேஷ்பாபுவின் 'மகரிஷி' படத்தில் நடித்து இருந்தார்.
86 வயதான கைகலா சத்ய நாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின், குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் கைகலா சத்ய நாராயணாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.