சங்கர் இயக்கத்தில் உருவான 'அந்நியன்' திரைப்படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்வதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
சங்கருக்கும் அப்படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் இடையே 'அந்நியன்' கதை உரிமை தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இந்நிலையில் இருவருமே அப்படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் இது தொடர்பாக நடிகர் ஜாக்கி சானுடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. அவரையும் இந்தி முன்னணி நடிகர் ஒருவரையும் வைத்து மறுபதிப்பை எடுக்கப் போவதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.
கடைசி நேரத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பங்களை அடுத்து 'மாநாடு' படம் நேற்று திட்டமிட்டபடி வெளியானது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
முன்னதாக தவிர்க்க இயலாத காரணங்களால் 'மாநாடு' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். இதுகுறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டார்.
"இது நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன்.
"நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகவில்லை என்ற தகவலை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன். படம் வெளி யாகும் தேதியைப் பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்து கிறேன்," என்று சுரேஷ் காமாட்சி மேலும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இரண்டு முக்கிய பிரமுகர்கள் தலையிட்டதை அடுத்து 'மாநாடு' படம் வெளியீடு கண்டதாகக் கூறப்படுகிறது.
முன்னணி நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் வலியுறுத்தப் போகிறதாம்.
'பாகுபலி' நாயகன் பிரபாஸ் தற்போது 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அவரது நடிப்பில் 'ஆதி புருஷ்', 'ஸ்பிரிட்' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இவ்விரு படங்களிலும் நடிக்க அவருக்கு 150 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இந்தி நடிகர்கள் சல்மான் கான், அக்ஷய் குமாரைவிட பிரபாஸ் அதிக சம்பளம் வாங்குகிறார்.
மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு நாள்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. தினமும் சிகிச்சைக்கு ரூ.2.5 லட்சம் செலவாகிறது என்றும் திரையுலக நண்பர்கள் உதவ வேண்டும் என்றும் சிவசங்கர் மாஸ்டரின் இளைய மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.