கோலிவுட்டுக்கு கிடைத்த இன்னொரு பிரியா பவானி சங்கர் என்று இளம் நாயகி மிருணாளினியைக் குறிப்பிடலாம். குடும்பப்பாங்கான, குறும்புத்தனமான இளம்பெண் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார்.
இவர் நடித்துள்ள 'எனிமி', 'எம்ஜிஆர் மகன்' ஆகிய இரு படங்களும் அண்மையில் வெளியீடு கண்டுள்ளன. விமர்சன ரீதியில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்து, விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள 'கோப்ரா' பட வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
இந்நிலையில், பெண்களுக்கு கல்விதான் முக்கியம் என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் மிருணாளினி.
ஏனெனில் கல்வியறிவு என்பது சினிமாவுக்கு மட்டுமல்ல, தனது வாழ்க்கை முழுவதும் உடன் இருக்கக்கூடியது என்கிறார்.
"நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த கணிதமும் அறிவியலும் நான் பார்க்கும் வேலைக்கு உதவவில்லை என்பது சரிதான். ஆனால் படிக்கும்போது கற்றுக்கொண்ட ஒழுக்கம், உண்மை, நேர்மை போன்ற நல்ல குணங்கள் பயன் தருகின்றன.
"சினிமாவைக் கடந்து ஒரு பெண்ணாக வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை படிப்புதான் கற்றுக்கொடுத்தது.
"இப்போது நான் சினிமாவில் இருக்கிறேன். எனக்கான வாய்ப்புகள் இதேபோல் தொடராது. ஒருவேளை அடுத்த பட வாய்ப்பு என்பது கிடைக்காமலேயே போகலாம். அதற்காக கவலைப்படமாட்டேன். ஏனெனில், என்னிடம் படிப்பு இருக்கிறது. அது எனக்கு சோறு போடும்," என்று அறிவுரை கூறுகிறார் மிருணாளினி.
கல்விதான் சொந்தக் காலில் நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கையைத் தமக்கு கொடுத்தது என்று குறிப்பிடுபவர், தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே பெண்களால் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்கிறார்.
"தன்னம்பிக்கையோடு இருப்பவர்களுக்குப் பிரச்சினைகள் வராது. அப்படியே வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் அவர்களிடம் இருக்கும். அப்படி இல்லையெனில் சிறு பிரச்சினை என்றாலும் கலங்கி நிற்பார்கள். அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும்," என்கிறார் மிருணாளினி.
எந்தத் துறையாக இருந்தாலும் போட்டி வேண்டும் என்று குறிப்பிடுபவர், போட்டி அதிகரிக்கும் போதுதான் திறமை வெளிப்படும் என்கிறார்.
"நான் எந்த இடத்தில் இருக்கிறேன், எனக்கான மதிப்பு என்ன என்பதை போட்டிதான் தீர்மானிக்கும். நமக்கு எதிராக உள்ளவர் எப்படி வெற்றிபெறுகிறார் அல்லது வெற்றிக்கு முயற்சி செய்கிறார் என்பதைக் கவனிக்க வைக்கும்.
"எந்தவிதப் போட்டியும் இன்றி, நமக்குத்தான் முதலிடம் என்றால் போரடித்துவிடும். சுறுசுறுப்பாக வேலை செய்யவே தோன்றாது. எனவே போட்டியை நமக்கு எதிரான ஒன்றாகக் கருதாமல், ஆரோக்கியமானதாகக் கருத வேண்டும்," என்று சொல்லும் மிருணாளினி, சிறிய வேடமாக இருந்தாலும் தனது திறமையை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்கிறார்.
சரி, மிருணாளினியின் அழகு ரகசியம் என்ன?
"நடிகையாக இருப்பதால் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது அவசியமாகி உள்ளது. தினமும் ஒன்றரை மணி நேரம் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வேன். நான் சுத்த சைவம். இட்லி, தோசை, சாதம் ஆகியவைதான் பிடிக்கும்.
"என்னைப் பொறுத்தவரை அழகுக்கு தியானம் மிக முக்கியம். பதற்றமாக உணரும்போது வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை நினைவுபடுத்திக்கொள்வேன்.
"அழகு என்பது தோற்றம் மட்டுமல்ல, அது உடல், மன நலன்களையும் சார்ந்தது," என்கிறார் மிருணாளினி.
, :
மிருணாளினி