முன்பெல்லாம் நடிகைகள் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு வீடு, நிலம் வாங்குவதாக தகவல் வெளியாகும். பிறகு திருமணம் செய்துகொண்டு திரையுலகை விட்டு விலகியதாக அறிவிப்பு வெளியாகும்.
ஆனால் இன்றுள்ள இளம் நடிகைகள் இதற்கு நேர்மாறானவர்களாக உள்ளனர். ஒருபக்கம் சினிமாவில் நடித்து சம்பாதிப்பவர்கள், இன்னொரு பக்கம் சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதிலும் சாதிக்கிறார்கள்.
நடிகை டாப்சி படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளார். நடிகைகள் நஸ்ரியா நஸீம், ஜோதிகா இருவரும் வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் நிறுவனங்களை நடத்துகின்றனர்.
காஜல் அகர்வாலின் நிறுவனம் உடல்நல ஆலோசனைகள் வழங்குவது, அது தொடர்பான பொருள்களை விற்பதில் கவனம் செலுத்துகிறது.
இதேபோல் வேறு யாரெல்லாம் சொந்தமாக தொழில் நிறுவனங்கள் தொடங்கி சாதித்து வருகிறார்கள் என்று பார்ப்போம்.
'பூமித்ரா' என்ற பெயரில் சரும அழகு சாதனப் பொருள்களை விற்பனை செய்யும் தொழில் துவங்கி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இன்ஸ்டகிராம் காணொளிப் பதிவின் மூலம் இதை தனது ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ள அவர், சமந்தா, தமன்னா உட்பட பல நடிகைகளுக்கு அந்தப் பொருள்களை அனுப்பி வைத்து தமக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர்களில் சிலர் கீர்த்தியின் சொந்த நிறுவனம் குறித்து தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பாராட்டி பதிவிட்டுள்ளனர். இதனால் கீர்த்தி உற்சாகத்தில் உள்ளார்.
கடந்த நான்கு மாதங்களாக தனது குழுவினருடன் இயற்கையான அழகுசாதனப் பொருள்களை உருவாக்க கடுமையாக உழைத்தாராம்.
அதன் பலனாக சந்தனம், ஏலக்காய், குங்குமப்பூ போன்ற இயற்கையான பொருள்களைக் கொண்டு பல்வேறு அழகு சாதனப் பொருள்களை தயாரித்துள்ளதாக ஒரு காணொளிப் பதிவில் விவரித்துள்ளார்.
தமன்னாவுக்கு சிறு வயது முதற்கொண்டு நகைகளை வடிவமைப்பதில் ஆர்வம் உண்டாம். இன்றுள்ள முன்னணி நடிகைகளில் முதலில் சொந்த நிறுவனம் தொடங்கியது இவர்தான்.
'ஒயிட் அண்ட் கோல்ட்' என்ற இவரது நிறுவனம் இணையத்தளம் மூலம் அழகான வடிவங்களில் தங்க நகைகளை விற்பனை செய்கிறது.
தமன்னாவின் தந்தை சந்தோஷ் பாட்யாவும் நகை வடிவமைப்பாளர்தான். அதனால் மகளின் நிறுவனத்தில் அவரும் பங்குதாரராக உள்ளார்.
தமன்னாவின் திரையுலக நண்பர்கள் பலர் அவரது நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து நகைகளை வாங்குகிறார்கள். அதிக லாபம் என்பது தனது நோக்கம் அல்ல என்றும் தனது நிறுவனத்தின் வடிவமைப்பு உலக அளவில் பேசப்பட வேண்டும் என்பதுதான் தமது விருப்பம் என்றும் சொல்கிறார் தமன்னா.
இந்தி நடிகை கத்ரினா கைஃப் சொந்த நிறுவனம் முழுக்க முழுக்க ஒப்பனைக்கான பொருள்களை விற்பனை செய்கிறது. மொத்தம் 48 வெவ்வேறு பொருள்களை விற்பனைக்கு களமிறக்கி உள்ளார்.
அனைத்துக்கும் இன்றைய தேதி வரை நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம். ஐந்தாயிரம் ரூபாய்க்கு மணப்பெண் அலங்காரத்துக்கு தேவையான ஒப்பனை பொருள்கள் அடங்கிய தொகுப்பு கிடைக்கும் என விளம்பரம் செய்கிறது கத்ரினாவின் 'கே பியூட்டி' நிறுவனம்.
இந்திய திரையுலகில் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகையான தீபிகா படுகோன் தனது தந்தையின் உதவியோடு பல சிறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
தற்போது செயற்கைக்கோள்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பங்குதாரராக இணைந்துள்ளாராம். மேலும் தனது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங்குடன் இணைந்து ஐபிஎல் கிரிக்கெட் அணி ஒன்றில் முதலீடு செய்யப்போகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
'சாகி' என்ற பெயரில் நிறுவனம் தொடங்கியுள்ள சமந்தா வித்தியாசமான வடிவமைப்புகளில் உடைகளை அறிமுகப்படுத்தி வருகிறார். அனைத்தும் பெண்களுக்கான ஆடைகள். 'மின்னிலக்க ஷாப்பிங்' களத்தில் தன் தோழிகளுடன் இணைந்து அசத்தி வருபவர், அவர்கள் நடத்தும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறாராம்.
காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து 'ரவுடி பிக்சர்ஸ்' எனும் படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நயன்தாரா, 'குயிக் சர்வீஸ் ரெஸ்டாரண்ட்ஸ்' என்ற உணவுப்பொருள்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நடத்துகிறார்.
மேலும், 'சாய் வாலே' என்ற தேநீர் நிறுவனத்திலும் முதலீடு செய்கிறார். இவரது நிறுவனங்களை விக்னேஷ் சிவன்தான் கவனித்துக் கொள்கிறாராம்.
குழந்தைகளுக்கான ஆடைகளை இணையம் வழி விற்கும் நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார் இந்தி நடிகை அலியா பட்.
குழந்தைகளிடம் சூழல் குறித்த ஆர்வத்தையும் அவசியத்தையும் ஏற்படுத்த அவர்களது உடைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த வாசகங்களைப் பொறித்திருக்கிறார்.
அத்துடன் உடை வாங்குபவர்களுக்கு அன்பளிப்பாக விதைகள் அடங்கிய பந்துகளை அனுப்பி வைக்கிறார். கடந்த கொரோனா ஊரடங்கின்போது துவங்கிய அலியாவின் நிறுவனம் இப்போது வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
நடிகை ராதிகா பல ஆண்டுகளாக தனது நிறுவனத்தின் மூலம் தொலைக்காட்சித் தொடர்களையும் திரைப்படங்களும் தயாரித்து வருகிறார்.
ஜோதிகா மிக விரைவில் ஒரு படத்தை இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அதை தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப் போகிறாராம்.
நடிகை சீதா, நடிகர்கள் மனோபாலா, சித்ரா லட்சுமணன் போன்றோர் 'யூடியூப்' மூலம் சம்பாதிக்கத் தொடங்கி உள்ளனர்.
முன்னாள் நாயகி ராதா, தன் மகள்களை நடிக்க வைத்து சொந்தமாக இணையத்தொடர்களை தயாரிக்க உள்ளதாகத் தகவல்.