திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

3 mins read
1a1825b9-0701-4ab7-a494-fa6ddbe9418c
-
multi-img1 of 3

 தாம் ஏற்று நடிக்கும் கதா பாத்திரங்கள் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண் டும் என்பதில் கவனமாக இருப்பதாகச் சொல்கிறார் சாய் பல்லவி.

மேலும், தமக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

"கதையிலும் கதா பாத்திரத்திலும் எனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய பட நிறுவனமாக இருந்தாலும் எனக்கேற்ற கதாபாத்திரமாக இருக்கிறதா என்பதைப் பார்த்து, பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வேன்.

"என் திறமையை வெளிப்படுத்தும் புதிய கதாபாத்திரமாகவும் இருந்தால் மகிழ்ச்சி அடைவேன். நான் சிறந்த நடனக் கலைஞர் என்ற எண்ணமே எனக்கு இல்லை. நடனம் என்பது இயல்பாகவே எனக்குள் இருக்கிறது. கவலையான, மகிழ்ச்சியான தருணங்களில் நடனத்தில் அதிக கவனம் செலுத்துவேன்," என்கிறார் சாய் பல்லவி.

 'மாநாடு' படம் வெளியீடு கண்ட நான்கு நாள்களில் நல்ல லாபம் ஈட்டியுள்ளது. படத்தின் வசூல் விநியோகஸ்தர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

இதையடுத்து தனது மகிழ்ச்சியை சமூகவலைத்தளப் பதிவு ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளார் சிம்பு.

தாம் ரசிகர்களுக்கு தெரிவிக்க நினைக்கும் உணர்வுகளை நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிட இயலாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

"என்னை நேசிப்பவர்களை எப்படியாவது மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது. படத்தில் பாடல் வெளியீட்டு விழாவில் நான் சிந்திய சிறு துளிகளை தரையில் விழவிடாமல் தாங்கிக்கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன். 'மாநாடு' படத்திற்கு வெறியோடு உலகம் முழுக்க வெற்றியை தேடித்தந்திருக்கி றீர்கள்," என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் சிம்பு.

 விக்ரம் மகன் துருவ் இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'மகான்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படம். இவ்விரு படங்களும் வெளியானதும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம் துருவ். இது முழுநீள காதல் கதை எனத் தகவல். இளையர்களைக் கவரும் வகையில் திரைக்கதையை அமைத்துள்ளார் விக்னேஷ் சிவன். அதனால் படத்தில் நடிக்க உடனே சம்மதித்துள்ளார் துருவ்.

 சண்டைக் காட்சியில் நடித்தபோது தாம் காயம் அடைந்ததாக நடிகை மாளவிகா மோகனன் தெரி வித்துள்ளார்.

'மாஸ்டர்' படத்தில் விஜய்யுடன் இணைந்த இவர், தற்போது இந்தியில் தயாராகும் 'யுத்ரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது முழுநீள அடிதடிப் படமாம்.

மாளவிகாவுக்கும் சில சண்டைக் காட்சிகள் உள்ளன. அண்மையில் மும்பையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

"சண்டைக் காட்சியை எடுத்தபோது, என் கையில் காயம் ஏற்பட்டது. அப்போதுதான் சண்டைக் காட்சிகளில் நடிப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்தேன்," என்கிறார் மாளவிகா. கையில் அடிபட்ட இடத்தை புகைப்படம் எடுத்து தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாகி உள்ள 'முருங்கைக்காய் சிப்ஸ்' திரைப்படம் டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது காதலும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள படமாம்.

 தனது பள்ளித் தோழர் இயக்கத்தில் 'வாஷி' என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்தப் படத்தை கீர்த்தியின் தந்தையும் சகோதரியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

 மதுபான விளம்பரத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டேவுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பணம் சம்பாதிப்பதற்காக மது அருந்துவதை ஊக்கப்படுத்தலாமா என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.