தமிழ்த் திரையுலகில் இனியா அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதாம். இதை அவரே கண்களை விரித்து ஆச்சரியத்துடன் சொல்கிறார்.
தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் 'நான் கடவுள் இல்லை' படத்தில் நடித்து வரும் இனியா, வாய்ப்புகளுக்காக தாம் எப்போதுமே மெனக்கெட்டது இல்லை என்கிறார்.
"தமிழ்த் திரையுலகில் அறிமுகமானதால் தமிழுக்கு முக்கியத்துவம் தருவேன். தாய்மொழி மலையாளம் என்பதால் அதையும் மறக்கமாட்டேன். அங்கு நல்ல கதை வரும்போது நடிக்கிறேன்.
"இப்போது பல மொழி படங்களில் நடிப்பதால் இந்திய நடிகை என்று குறிப்பிட்டால் பெருமிதம் அடைவேன்," என்று சொல்லும் இனியா, தற்போது சாய் கிருஷ்ணா இயக்கும் 'காஃபி', ராம்நாத் இயக்கத்தில் 'ஆதார்', ஹரீஷ் இயக்கும் 'இஷ்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுத்ததாக குறிப்பிடுபவர், வாழ்க்கையை நின்று நிதானித்துப் பார்க்க கொரோனா ஊரடங்கு காலம் உதவியதாகச் சொல்கிறார்.
"நேரத்தின் முக்கியத்துவம், குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவது எவ்வளவு அவசியம் என்று புரிந்தது. சினிமா நட்சத்திரமாக இருப்பதால் சரியான நேரத்துக்குத் தூங்க முடியாது, ஓய்வு எடுக்க நேரம் கிடைக்காது, நேரத்துக்கு சாப்பிட முடியாது.
"ஆனால், ஊரடங்கு வேளையில் நீண்ட ஓய்வு கிடைத்ததால் நிறைய விஷயங்கள் குறித்து உணர்வுபூர்வமாகச் சிந்திக்க முடிந்தது.
"என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு புது விஷயத்தைக் கற்றுக்கொள்வேன். ஊரடங்கின்போது இணையம் வழி நடனப்பயிற்சியை மேற்கொண்டேன்.
"பழைய நடன அசைவுகளை, நுணுக்கங்களை அசைபோட்டுப் பார்க்க முடிந்தது. மிக முக்கியமாக, புது மொழிகளை கற்றுக்கொள்ள முயன்றேன். அதற்கு ஓரளவு பலன் கிடைத்துள்ளது," என்கிறார் இனியா.
இவருக்கு திரையரங்கில் படம் பார்ப்பதுதான் பிடிக்குமாம். ஆனால், ஊரடங்கின்போது ஓடிடி தளங்களில் படம் பார்க்கத் தொடங்கி இப்போது அதுவே பழகிவிட்டதாகச் சொல்கிறார்.
இனியாவின் சகோதரியும் திரையுலகில் இருப்பதால் அடிக்கடி சந்தித்துக்கொள்வதில்லை. இந்த வருத்தத்தை ஊரடங்கு போக்கி உள்ளது.
திரையுலகிலும் ரசிகர்களிடமும் தமக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்த படங்களில் 'வாகை சூடவா' படத்துக்குத்தான் எப்போதுமே முதல் இடம் என்று குறிப்பிடுபவர், அப்படம் வெளியாகி பத்தாண்டுகள் ஆகிவிட்ட போதிலும், ரசிகர்கள் அதை மறக்கவில்லை என்பது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.
"அந்தப் படத்தில் இப்போதுதான் நடித்து முடித்த மாதிரி இருக்கிறது. பத்து ஆண்டுகள் வேகமாக கடந்துவிட்டன. வயதும் வருடமும் போவது தெரியாது என்பார்கள். என் விஷயத்தில் அதுதான் நடந்துள்ளது.
"தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் 'வாகை சூடவா'வை என்னுடைய அடையாளமாக இப்போதும் ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள். தேசிய விருது பெற்ற படம் என்பதால் தமிழில் பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது.
"தமிழில் நாயகியாக நடிக்க ஆரம்பித்த பிறகுதான் மலையாளத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன," என்று சொல்லும் இனியா, தனது வளர்ச்சிக்கு காரணமான அந்தப் படத்தை இயக்கிய சற்குணம், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், நாயகன் விமல் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறுகிறார்.
'நான் கடவுள் இல்லை' படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்துள்ளார் இனியா.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் சுறுசுறுப்பான செயல்பாடும் படத்தை இயக்கும் விதமும் தம்மை ஆச்சரியப்பட வைப்பதாகக் கூறுகிறார்.
"மிகப் பெரிய இயக்குநர், நடிகர் விஜய்யின் தந்தை என்பதை எல்லாம் கடந்து, மிகவும் நட்பாகப் பழகுகிறார்.
"இளைஞராகவும் தேவைப்பட்டால் குழந்தையாகவும் மாறிவிடுவார்.
"அவரது நினைவாற்றல் அபாரமானது. எத்தனை பக்க வசனமாக இருந்தாலும் எழுதி வைத்ததைப் பார்க்காமல் அப்படியே சொல்லித் தருவார். அவரைப்போன்ற அனுபவ இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கும்போது திரையுலகம் சார்ந்த பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. 'நான் மகான் அல்ல' படம் விரைவில் வெளியீடு காணும்," என்கிறார் இனியா.
, :
இனியா

