திரைத் துளி­கள்

2 mins read
a20fd1b0-9ae4-4618-9f6c-4128afaf370b
-
multi-img1 of 3

மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணியில் மிக பிரம்மாண்டமான வரலாற்றுப் படமாக உருவாகியுள்ளது 'மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. இந்தப் படம் கிட்டத்தட்ட 83 கோடி ரூபாய் செலவில் உருவானது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் படத்தை தற்போதைய சூழலில் திரையரங்குகளில் வெளியிட்டால் படத்திற்கு செலவிட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டதால் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு 'ஓடிடி'யில் வெளியிடத் தயாரானார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.

அந்தச் சமயத்தில் கேரள அரசு திரையரங்குகளில் படம் வெளியாவதில் சில விஷயங்களில் உதவி செய்ய முன் வந்தது. அதைத் தொடர்ந்து மனதை மாற்றிக்கொண்ட தயாரிப்பாளர் படத்தை திரையரங்கு களில் வெளியிட முன்வந்தார்.

இந்நிலையில் படத்திற்கான முன்பதிவு மட்டும் நூறு கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்கிற தகவல் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றிலேயே இப்படி முன்பதிவிலேயே அதிகம் வசூலித்த முதல் படம் இதுதான் என்கிற சாதனையையும் இந்தப் படம் பெற்றுள்ளது.

கேரளாவில் 625, உலகெங்கிலும் 4,100 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலும் பல திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

'வருண் டாக்டர்' படம் மூலம் தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்த சிவகார்த்தி கேயன் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ரித்து வர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற திரைப்படத்தில்தான் அறிமுகமானார். இவர் தெலுங்கிலும் பிரபலம் என்பதால் இவரை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'எப்.ஐ.ஆர்'. அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரியில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

'ராதே ஷியாம்' படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் காதல் ததும்பும் கீதமான 'தரையோடு தூரிகை' பாடலை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்பாடலில் படத்தின் நாயகனான பிரபாஸ் நாயகி பூஜாவை இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.