'இவர் எளிமையான நடிகை'

3 mins read
77c24f2d-5c5f-4db4-890f-1d27a64c25d8
-

நடன இயக்­கு­நர் ஹரி­கு­மார் இப்­போது இயக்­கு­ந­ராக மாறி உள்­ளார். அவ­ரது இயக்­கத்­தில் உரு­வா­கும் படம் 'தேள்'. பிர­பு­தேவா நாய­க­னா­க­வும் சம்­யுக்தா ஹெக்டே நாய­கி­யா­க­வும் நடித்­துள்­ள­னர்.

வசூல் ரீதி­யில் வெற்­றி­பெற்ற 'தூத்­துக்­குடி', 'மதுரை சம்­ப­வம்' உள்­ளிட்ட சில படங்­களில் நாய­க­னா­க­வும் நடித்­துள்­ளார் ஹரி­கு­மார். திடீ­ரென ஒரு படத்தை இயக்க வேண்­டும் என்று மன­தில் தோன்­றி­ய­தாம்.

"உடனே பிர­பு­தேவா மாஸ்­டரை அணுகி­னேன். படத்­தின் கதை­யைக் கேட்­ட­தும் உடனே நடிக்­கச் சம்­ம­தித்­தார். எளி­மை­யான தோற்­ற­மும் இயல்­பான நடிப்­பும் கொண்ட நாயகி தேவைப்­பட்­டார். அப்­போது சம்­யுக்­தா­வின் நினைவு வந்­தது. 'கோமாளி' படத்­தில் மிக இயல்­பாக நடித்­தி­ருப்­ப­தைப் பார்த்த­தும் எந்­த­வித தயக்­க­மும் இன்றி அவரை ஒப்­பந்­தம் செய்­து­விட்­டோம்," என்­கி­றார் ஹரி­கு­மார்.

தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம் எனப் பல்­வேறு மொழி­களில் நடன இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றிய போது, பிர­பு­தே­வா­வு­ட­னும் இணைந்து பணி­யாற்­றும் வாய்ப்பு கிடைத்­த­தா­கச் சொல்­ப­வர், பிர­பு­தே­வா­வு­டன் எப்­போ­தும் தொடர்­பில் இருந்து வந்­த­தா­கக் கூறு­கி­றார். நட­னம் தான் இரு­வ­ரை­யும் இணைத்து வைத்­தது என்­றும் சொல்­கி­றார்.

"பிர­பு­தேவா மாஸ்­டர் நடனப் புயல் மட்­டு­மல்ல, மிகச் சிறந்த நடி­கர். சின்­னச்­சின்ன முக­பா­வங்­க­ளால் அச­ர­டிப்­பார். தனது நடிப்­புத் திற­மையை அவர் பல படங்­களில் வெளிப்­ப­டுத்தி உள்­ளார்.

"ஆனால் இதை­யெல்­லாம் கடந்து அவரை திரை­யில் வித்­தி­யா­ச­மாக காட்ட வேண்­டும் என விரும்­பி­னேன். அத­னால் அவ­ருக்­கென ஒரு கதா­பாத்­தி­ரத்தை உரு­வாக்கி உள்­ளேன்.

"படத்­துக்­காக புருவ முடி­யைக் குறைத்­துக் கொண்­டுள்­ளார். இட­துகை பழக்­கம் உள்ள­வ­ராக நடித்­துள்­ளார். இட­துகை பழக்­க­மு­டை­ய­வர்­கள் கூடு­தல் அறி­வாற்­ற­லு­டன் இருப்­பார்­கள். எதை­யும் கச்­சி­த­மாக அணு­கக்­கூ­டி­ய­வர்­கள் என்­ப­தும் அறி­வி­யல் உண்மை. இதை தனது கதா­பாத்­தி­ரத்­தின் மூலம் மிக அரு­மை­யாக வெளிப்­படுத்தி உள்­ளார்.

"வெறும் நட்­புக்­காக அவர் இதில் நடிக்­க­வில்லை. அவ­ருக்­குள் ஒன்­றல்ல, நான்கு இயக்­கு­நர்­கள் உள்­ள­னர். கதை பிடித்­தி­ருந்­த­தால் மட்­டுமே நடிக்­கச் சம்­ம­தித்­தார்," என்­கி­றார் ஹரி­கு­மார்.

முதன்­மு­றை­யாக இந்­தப் படத்­தில் மது­வி­டு­தி­யில் நட­ன­மா­டும் பெண்­ணாக நடித்­துள்­ளார் சம்­யுக்தா. அவ­ரால் சவா­லான வேடங்­களில் மிக அனா­ய­ச­மாக நடிக்க முடி­யும் என்­பது ஹரி­கு­மா­ரின் கணிப்பு.

"சம்­யுக்தா பார்க்­கத்­தான் எளிமை. இன்ஸ்­ட­கி­ரா­மில் அவரை மில்­லி­யன் கணக்­கா­னோர் பின்­தொ­டர்­கி­றார்­கள். கதை தயா­ரா­ன­தும் முன்­னணி நாய­கி­களில் ஒரு­வரை ஒப்­பந்­தம் செய்ய வேண்­டும் என்­ப­து­தான் எனது விருப்­ப­மாக இருந்­தது. பிறகு கதைக்கு ஏற்ப எளி­மை­யாக தோற்­ற­ம­ளிக்­கும் நாய­கியைத் தேட­லாம் என்று முடிவு செய்­தோம். அதன் பிறகு சம்­யுக்தா எங்­க­ளு­டன் இணைந்­தார்.

"மிகுந்த அர்ப்­ப­ணிப்­பு­டன் நடிக்­கும் ஒரு­சில நடி­கை­களில் இவ­ரும் ஒரு­வர். தமிழ் படிக்­கத் தெரி­யாது. ஆங்­கி­லத்­தில் எழுதி வைத்து, மனப்­பா­டம் செய்து, சிறி­தும் பிசிறு தட்­டா­மல் வச­னங்­க­ளைப் பேசி­னார். பிர­பு­தே­வா­வுக்­கு­ம் சேர்த்து சம்­யுக்தா தான் நட­ன­மாடி உள்­ளார்," என்று தன் பட நாய­கி­யைப் பாராட்டித் தள்­ளு­கி­றார் ஹரி­கு­மார்.

பிர­பு­தே­வா­வின் தாயா­ராக ஈஸ்­வரி ராவ் நடித்­துள்­ளார். 'காலா' படத்­துக்­குப் பிறகு நிறைய பட வாய்ப்­பு­கள் தேடி­வந்த போதும் அவற்­றில் நடிக்க மறுத்­து­விட்ட அவர், 'தேள்' படத்­தின் கதை­யைக் கேட்­ட­தும் அரு­மை­யாக இருப்­ப­தா­கப் பாராட்டி, கால்­ஷீட் ஒதுக்­கி­னா­ராம்.

கதை­யோடு கலந்த கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார் யோகி­பாபு. முன்­னணி நகைச்­சுவை நடி­க­ராக வளர்ந்­து­விட்ட போதி­லும், ஒரு காட்­சியை மெரு­கேற்­று­வது என்­றால் இயக்­கு­ந­ரி­டம் அது­கு­றித்து தெரி­வித்து, அவ­ரது அனு­ம­தி­யோ­டு­தான் செயல்­படு­கி­றா­ராம்.

"வில்­ல­னாக நடித்­துள்­ளார் சத்ரு. 'கடைக்­குட்டி சிங்கம்' படத்­தில் இவ­ரைப் பார்த்­தி­ருக்க முடி­யும். மாரி­முத்து, அர்ஜய், இமான் அண்­ணாச்சி, 'நாடோ­டி­கள்' பரணி, 'கபாலி' விஷ்­வாந்த், உதய் கார்த்­திக், மாதவி, மஹானா என மேலும் பலர் உள்­ள­னர். அனைத்து கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­கும் உரிய முக்­கி­யத்­து­வம் இருக்­கும்," என்­கி­றார் இயக்­கு­நர். இசை சி.சத்யா.

"தனுஷ், சிவ­கார்த்­தி­கே­யன்,'ஜெயம்' ரவி என எல்­லா­ருக்­கும் ஒத்­து­வ­ரக்கூடிய கதை­களைத் தயார் செய்து வைத்­தி­ருக்­கி­றேன். 'தேள்' அந்த இடத்­துக்கு என்னை அழைத்­துச் செல்­லும் என்ற நம்­பிக்கை இருக்­கிறது.

"அடுத்து 'அக்னி' என்ற படத்தை இயக்கி நடிக்­கி­றேன். பாதிப் பணி­கள் முடிந்­து­விட்­டன. விரைவில் வெளியாகும்," என்­கி­றார் ஹரி­கு­மார்.

இந்தப் படம் வெளியானதும் தமிழ்த் திரையுலகத்தினர் மீண்டும் தங்கள் பார்வையை தன் பக்கம் திருப்புவார்கள் என்று உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார் சம்யுக்தா.

இடையில் சில சர்ச்சைகளில் சிக்க நேர்ந்ததால் தமது பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தமது ரசிகர்களின் தொடர் ஆதரவால்தான் திரையுலகில் வாய்ப்புகள் குறையும்போது நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் செயல்பட முடிகிறது என்கிறார். 'தேள்' என்ற தலைப்புக்கும் படத்தின் கதைக்கும் பல வகையிலும் தொடர்புகள் இருக்கும். அது படம் பார்க்கும்போது ரசிகர்களுக்குத் தன்னால் புரியும்," என்கிறார் சம்யுக்தா ஹெக்டே.

, :   