'மாநாடு' பட வெற்றி தந்த உற்சாகத்தில் அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.
கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' கிராமத்துப் பின்னணியில் சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகிறதாம். படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கிடையே 'மாநாடு' பட வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதால் விநியோகிப்பாளர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது. இந்நிலையில், படத்தின் பிறமொழி உரிமை பெருந்தொகைக்கு விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருதினங்களுக்கு முன்னர் மும்பையிலும் ஹைதராபாத்திலும் நடைபெற்ற படத்தின் அறிமுக விழாவில் இரு திரையுலகையும் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையே 'தங்க மீன்கள்' படத்தின் இயக்குநர் ராம் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படம் இப்போதைக்கு சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.
ராம் பெரிய பட்ஜெட் படங்களை இயக்குவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவிடம் அவர் கதை சொல்லி இருந்தாராம். அன்றைய சூழலுக்கு சிம்புவும் நடிக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால் 'மாநாடு' அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது. எனவே, அடுத்து இரண்டு பிரம்மாண்ட படங்களில் நடித்தபிறகே ராம் இயக்கத்தில் நடிப்பது குறித்து சிம்பு முடிவு செய்வார் என அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

