சதீஷ் பார்த்திபன்
இந்திய அரசியலின் குறிப்பிடத்தக்க கவன ஈர்ப்பு மையங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது சென்னை போயஸ் தோட்டம். காரணம், ஜெயலலிதா!
தெருக்களின் சுத்தம், சுகாதாரம், சாலையோர மரங்கள், வழவழப்பான சாலைகள், காரணமின்றி எவரும் நுழைய முடியாதபடி பாதுகாப்பு, தடையற்ற மின், நீர் விநியோகம் என அது ஒரு தனி உலகம்தான்.
இந்த போயஸ் உலகத்தை மேலும் அழகாக்க நடிகை நயன்தாரா இங்கே குடியேறுகிறார். அதற்கு முன், போயஸ் தோட்டத்தின் கதை என்ன என்பதை பறவைப் பார்வையில் பார்க்கலாம் வாங்க.
1967ல் குடியேறிய ஜெயலலிதா
தன் தாயார் சந்தியாவுடன் இணைந்து 1967ஆம் ஆண்டிலேயே 130,000 ரூபாய் கொடுத்து 2,400 சதுர அடி இடத்தை வாங்கி வீடு கட்டினார் ஜெயலலிதா. அதன் பின் 1980களில் எம்ஜிஆர் கொடுத்த மூன்று லட்ச ரூபாயை வைத்து வீட்டை விரிவுபடுத்திக் கட்டினார்.
1990களுக்குப் பின், இந்திய அரசியலின், குறிப்பாக தமிழக அரசியலின் அதிகார மையமாக விளங்கியது ஜெயலலிதாவின் வெள்ளை மாளிகை. அவரது மறைவுக்குப் பின் அந்தப் பகுதியில் அதிகார பரபரப்பு குறைந்து போய்விட்டாலும்கூட போயஸ் தோட்டத்தின் கௌரவம் உயர்ந்துகொண்டேதான் போகிறது.
சென்னையில் நில மதிப்பு அதிகம் உடைய இரண்டு பகுதிகள் போயஸ் தோட்டமும் அடையாறு 'போட் கிளப்' பகுதியும்தான்.
ரஜினிகாந்த், கார்த்திக், ஜெயம்ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும், தினத்தந்தி நாளிதழ் அதிபர் உள்ளிட்ட பிரபலங்களும் போயஸ் தோட்டத்தில்தான் வசிக்கிறார்கள். பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் இங்கே நிலம் வாங்க முடியாது. சொத்து முகவர்களிடம் முன்கூட்டியே விருப்பத்தை தெரிவித்து முன்பதிவு செய்துதான் சில, பல ஆண்டுகள் காத்திருந்துதான் வாங்க முடியும்.
"அதுவும் காலி மனைகள் கிடைக்காது. பழைய வீட்டை வாங்கி, அதை இடித்துவிட்டு புது பங்களா கட்ட முடியும். இது 'வேற லெவ'லில் இருப்பவர்கள் வசிக்கும் பகுதி," என்கிறார்கள் சென்னையைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.
மாமனார் வீட்டுக்கு எதிரே புதுவீடு கட்டும் தனுஷ்
கொஞ்ச நாளாய் அடங்கிக்கிடந்த போயஸ் பரபரப்பு மீண்டும் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி சூடுபிடித்தது. ஏனென்றால், நடிகரும் ரஜினியின் மூத்த மருமகனுமான தனுஷ் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று கிரவுண்ட்டில் வீடு கட்ட பூசை போட்டதுதான்.
தன் மனைவி ஐஸ்வர்யா, இரு மகன்களுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது தளத்தில் வசித்து வந்தார் தனுஷ்.
மூத்த மகள் ஐஸ்வர்யா மீது ரஜினிக்கு பாசம் அதிகம். அதோடு பேரப்பிள்ளைகள் மீதும் ரொம்பப் பிரியம். அதனால் படப்பிடிப்பு இல்லாத நாள்களில் அங்கே சென்றுவிடுவார்.
அவ்வாறு சென்று வரும்போதெல்லாம் குடியிருப்புவாசிகள் கூட்டமாக கூடுவது, சிலர் காரை நிறுத்தி பேச முற்படுவது உள்ளிட்ட சில தொந்தரவுகள் ஏற்பட்டன. மருத்துவர்கள் அவரை முடிந்தவரை வெளி ஆட்களிடம் இருந்து விலகி இருக்கும்படி கேட்டுக் கொண்டதால், பேரனைப் பார்க்க வசதியாக போயஸ் தோட்டப் பகுதியிலேயே குடியேறும்படி மாப்பிள்ளையிடம் கேட்டுக்கொண்டார் ரஜினி. அதன்படி, ஓரிரு வருடங்களுக்கு முன்பு எப்படியோ முன்பதிவு செய்து, ரஜினி வீட்டிற்கு எதிரே இருந்த பங்களாவை வாங்கி இடித்துவிட்டு, சுமார் 100 கோடி ரூபாய் செலவில் புதிய வீடு கட்டி வருகிறார் தனுஷ்.
'போட் கிளப்'பில் திரிஷா; போயஸ் தோட்டத்தில் நயன்தாரா
அடையாறு 'போட் கிளப்' பகுதியில் தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகி திரிஷா குடியிருக்கிறார்.
இன்னொரு முக்கிய பகுதியான போயஸ் தோட்டத்தில் தமிழ் சினிமாவின் இன்னொரு முக்கிய நாயகியான நயன்தாரா குடியேறுகிறார்.
இதற்காக ஒரே அடுக்குமாடியில் நான்கு படுக்கையறைகள் கொண்ட இரண்டு வீடுகளை, அதுவும் எதிர் எதிர் வீடுகளை வாங்கியிருக்கிறாராம் நயன். ஒவ்வொரு வீடும் சுமார் 18 கோடி ரூபாய் என்கிறது தகவல் அறிந்த வட்டாரம்.
விரைவில் தன் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை இந்த இல்லத்தில் இருந்துதான் தொடங்கவிருக்கிறார் நயன்.
தங்கத்தில் முதலீடு செய்யும் நயன்
நயன்தாரா வுக்கு தங்கத்திலும் குடியிருப்புகளிலும் முதலீடு செய்வது வழக்கம். தங்கத்தில்தான் அதிக முதலீடும் செய்து வருகிறார்.
ஏற்கெனவே ஹைதராபாத்தில் பிரபலங்கள் வசிக்கும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்கியிருந்த நயன் அதை விற்றுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
பெரும்பாலும் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்த நயன் கடந்த சில ஆண்டு களாக தன் காதலருடன் ஒரு குடியிருப்பில் வாடகைக்கு வசிக்கிறார்.
கேரளா திருவல்லாவில் நயன்தாராவின் பூர்வீக வீடு இருந்தாலும், கொச்சியில் உள்ள தேவாரா பகுதியில் பிரபலமான 'மதர்ஸ்' அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு நவீன வீட்டை வாங்கி தன் பெற்றோருக்கு கொடுத்துள்ளார். அவர்கள் அங்குதான் வசிக்கிறார்கள்.
இந்த வீட்டுக்கு தன் 'குரியன் கொடியாட்டு இல்லம்' என தன் தந்தையின் பெயரை வைத்துள்ளார். ஓணம், கிறிஸ்துமஸ் பண்டிகைகளை இந்த வீட்டில்தான் தன் காதலருடன் கொண்டாடுவார் நயன். இப்போது இல்லற வாழ்விற்காக போயஸ் தோட்டத்தில் இரண்டு 'பிளாட்'களை வாங்கிஉள்ளார்.
, :
நயன்தாரா
போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா, ரஜினி வீடுகள் (இடமிருந்து வலமாக)
ஜெயலலிதா
ரஜினி
ஜெயம் ரவி
திரிஷா

