2021ஆம் ஆண்டு இறுதிக்கட்டம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அதனால் இந்த ஆண்டில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் டுவிட்டர் தளத்தில்தான் சினிமா பற்றிய தகவல்கள் பரிமாற்றம், விவாதங்கள், பட விளம்பரங்கள் என பல விஷயங்கள் அதிகம் வருகின்றன.
தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு திரையுலகத்தினர்தான் டுவிட்டரை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் 2021ல் டுவிட்டரில் சாதனை படைத்த தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பட்டியலை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் திரைத்துறையில் இந்த ஆண்டு தேசிய அளவிலும் தென்னிந்திய அளவில் முதல் இடம் பிடித்த நடிகைகள், நடிகர்கள், படங்களின் விவரங்களை தகவல்களுடன் வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட முதல் பத்து தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் கீர்த்தி சுரேஷ் முதலிடத்தைப் பிடித்து மற்ற சக நடிகைகள் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்.
'இது என்ன மாயம்' படத்தில் தொடங்கிய அவரது பயணம், 'தொடரி', 'சர்க்கார்', 'ரெமோ', 'தானா சேர்ந்த கூட்டம்' என அடுத்தடுத்து முன்னணி நாயகர்களின் படங்களாகத் தொடர்ந்தது.
அண்மையில் ரஜினிகாந்துக்கு தங்கையாக 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். டிசம்பர் 2ஆம் தேதி சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'மரக்கர் அரபிக்கடலின் சிம்ஹம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த ஆண்டு முழுவதும் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தை பூஜா ஹெக்டேவும், சமந்தா 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
காஜல் அகர்வால் 4வது இடத்திலும் மாளவிகா மோகன் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அவர்களுக்கு அடுத்தபடியாக 6வது இடத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஏழாவது இடத்தில் சாய்பல்லவி, எட்டாவது இடத்தில் தமன்னா, ஒன்பதாவது இடத்தில் அனுஷ்கா ஷெட்டி, பத்தாவது இடத்தில் அனுபமா பரமேஷ்வரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஆச்சரியப்படும் செய்தி என்ன வென்றால், 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாராவின் பெயர் இந்த வரிசையில் இடம்பெறவில்லை.
நயன்தாராவின் நடிப்பில் இந்த ஆண்டு 'நெற்றிக்கண்', 'அண்ணாத்த' ஆகிய படங்கள் வெளியாயின.
இருப்பினும் அவரது பெயர் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட முதல் 10 தென்னிந்திய நடிகைகளின் வரிசையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகைகள் பல தென்னிந்திய மொழிகளிலும் நடிப்பதால் தமிழ் நடிகைகள் என்று பிரித்துப் பார்க்க முடியாது.
நடிகர்களில் விஜய், பவன் கல்யாண், மகேஷ் பாபு, சூர்யா, ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், ரஜினிகாந்த், ராம் சரண், தனுஷ், அஜித் ஆகியோர் முதல் பத்து இடங்களைப் பிடித்திருக்கின்றனர்.
நடிகர்களைப் பொறுத்தவரையில் விஜய், சூர்யா, ரஜினிகாந்த், தனுஷ், அஜித்குமார் ஆகிய ஐந்து தமிழ் நடிகர்கள் முதல் பத்து இடங்களில் வந்துள்ளனர்.
இவர்களில் விஜய் முதலிடத்தைப் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை. அஜித் 10வது இடத்தைப் பிடித்திருப்பதுதான் ஆச்சரியம். அஜித்திற்கு சொந்தமாக டுவிட்டர் கணக்கு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படங்களில் 'மாஸ்டர்', 'வலிமை', 'பீஸ்ட்', 'ஜெய் பீம்', 'வக்கீல் சாப்', 'ஆர்ஆர்ஆர்', 'சர்காரு வாரி பாட்டா', 'புஷ்பா', 'டாக்டர்',
'கேஜிஎப் 2' ஆகிய படங்கள் முதல் பத்து இடங்களைப் பெற்றிருக்கின்றன.
இந்த வரிசையில், முதல் நான்கு இடங்களை தமிழ்ப் படங்கள் கைப்பற்றி உருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
2022லும் தமிழ்ப் படங்கள்தான் டுவிட்டரில் அதிக அளவில் ஆட்சி செலுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் கோலிவுட் திரைத்துறையினர்.
2021ல் டுவிட்டரில் முதல் பத்து இடங்கள்

