துபாயில் நடைபெற்ற விருது நிகழ்ச்சி ஒன்றில் பஙகேற்ற விஜய் சேதுபதி பல ஆண்டுகளுக்கு முன்பு தாம் அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த நாள்களை நினைவுகூர்ந்தார்.
மேலும், துபாயை தமது இரண்டாவது தாயகமாக நினைப்பதாகவும் அவர் கூறினார்.
"நான் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். நிறைய லட்சியங்களுடன் கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய்க்கு வந்தேன்.
"இங்குள்ள சாலைகளில் எனது கனவுகளை நினைத்தபடி நடந்து சென்றுள்ளேன். எப்போது இங்கு வந்தாலும், ஒருமுறையாவது நான் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று பார்வையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
"இங்கு வந்தபிறகு இது ஒரு புதிய நாடு, வெளிநாடு என்ற உணர்வு ஏற்படவில்லை. துபாயில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பிறகு சென்னை சென்றதும் எல்லாம் மாறிவிட்டது.
"சினிமாவில் அறிமுகமாகி, ஒரு நடிகனாக நான் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளேன் என்பது ஒருவகையில் விபத்துதான். துபாய் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது," என்றார் விஜய் சேதுபதி.
ஐக்கிய அரபு சிற்றரசு அங்கு வசிக்கும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தொழில் அதிபர்கள், நிர்வாகிகளைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
அண்மைய நிகழ்ச்சியில் இந்த விருதுகளை தன் கையால் வழங்கினார் சேதுபதி. இதையடுத்து திரைத்துறையில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திரம் என்ற விருது சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

