விஜய் ரசிகர்கள் மத்தியில் அபர்ணா தாஸ் பற்றித்தான் அதிகம் பேசப்படுகிறது. அவர்களில் ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் அபர்ணாவை பின்தொடரத் தொடங்கி உள்ளனர்.
யார் இந்த அபர்ணா தாஸ் என்ற கேள்வி எழுவது இயல்புதான். 'பீஸ்ட்' படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார் அபர்ணா.
அப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நூறு நாள்கள் ஆனதையடுத்து, படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். அதில் முதலாவதாக நிற்கும் இளம்பெண் யார் என்று விஜய் ரசிகர்களில் பலருக்குத் தெரியவில்லை. எனினும் அந்த இளம்பெண் பலரது கவனத்தை ஈர்த்தார்.
ரசிகர்கள் விடுவார்களா?
இணையத்தில் சல்லடைபோட்டு அவரைத் தேடிப்பிடித்து விட்டனர். அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் ஏற்கெனவே திரையுலகில் அறிமுகமாகிவிட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.
'ஞான் பிரகாஷன்', 'மனோஹரம்' என்று மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார் அபர்ணா.
"கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நென்மாறா தான் எங்களுடைய சொந்த ஊர். அப்பா, அம்மா இருவரும் ஓமன் நாட்டில் வசிக்கின்றனர். நான் சினிமா வாய்ப்புகளுக்காகவும் எனது தனிப்பட்ட விருப்பங்களுக்காகவும் கேரளாவிலேயே தங்கிவிட்டேன்," என்கிறார் அபர்ணா.
கேரளாவில் பள்ளிப்படிப்பை முடித்துள்ள இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில்தான் படித்தாராம். படிக்கும்போதே மாடலிங் துறை, விளம்பரப் படங்கள் என்று தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டார். பின்னர் குறும்பட வாய்ப்புகளும் தேடிவந்துள்ளன. நடிப்பு மீதான ஆர்வமும் ஆசையும் சிறு வயதிலேயே மனதில் தோன்றிவிட்டதாகச் சொல்கிறார்.
"பள்ளியில் படித்தபோது கலை நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்பேன். அவை எல்லாம் பசுமையான நினைவுகள். பள்ளி நாள்கள் கலகலப்பானவை.
"பகத் ஃபாசில் நடித்த 'ஞான் பிரகாஷன்' தான் மலையாளத்தில் என முதல் படம். அதில் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தேன். சிறிய வேடம் என்றாலும் திரைத்துறையைப் பற்றி பலவற்றைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அவை நாயகியாக நடித்தபோது எனக்குக் கைகொடுத்தன," என்கிறார் அபர்ணா தாஸ்.
முதல் படம் வெளியான கையோடு 'மனோஹரம்' என்ற படத்தில் இவரை நாயகியாக ஒப்பந்தம் செய்தனர். இயல்பாக நடிப்பதாக பெயரெடுத்ததன் பலனாக நாயகி வாய்ப்பு தேடிவந்துள்ளது. இப்போது 'பிரியன் ஒட்டத்திலானு' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறாராம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படம் திரைகாணும்.
"விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. சிறிய வேடம் என்றால் எனக்கான முக்கியத்துவம் இருக்கும் என்று தோன்றியதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
"ஒரே ஒரு புகைப்படம் மூலமாக விஜய் ரசிகர்களிடம் அறிமுகமாகி, அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளதை நினைத்தால் வியப்பாக உள்ளது. விஜய் சாருக்கு எப்படிப்பட்ட செல்வாக்கு உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்," என்று சொல்லும் அபர்ணா, இதுவரை எந்தக் கிசுகிசுவிலும் சிக்கியதில்லை. காதல் குறித்தெல்லாம் பேசுவது நேரத்தை வீணடிக்கும் வேலை என்கிறார். இவரது ஒரே சகோதரர் அபிஷேக் தாஸ். அவருக்கு தன் மீது மிகுந்த பாசமும் அக்கறையும் உள்ளதாகச் சொல்கிறார்.
அபர்ணா ஒரு புத்தகப் புழு. எந்நேரமும் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பாராம். மேலும் பயணங்கள் என்று சொன்னாலே உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறார்.
"பயணங்கள் மேற்கொள்வது ஓர் அலாதியான அனுபவம். உலகைச் சுற்றி வரச் சொன்னால், மற்ற அனைத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு பயணத்துக்குத் தயாராகிவிடுவேன். பயணத்துக்கு அடுத்தபடியாக நடனத்தை நேசிக்கிறேன்," என்கிறார் அபர்ணா தாஸ்.

