'மாநாடு' படம் வெற்றிபெற்றுள்ள நிலையில் அதன் நாயகன் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
'மாநாடு' படத்தை குறித்த தேதியில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, ரூ.5 கோடிக்கு ராஜேந்தர் உத்தரவாதம் அளித்தார். இதனால் பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட்டு படமும் வெளியானது.
இந்நிலையில் படத்தின் செயற்கைக்கோள் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு விற்க முடிவு செய்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
இந்நிலையில், 'மாநாடு' படத்தை வெளியிட பெரு முயற்சி எடுத்த தங்களைக் கலந்தாலோசிக்காமல் செயற்கைக்கோள் உரிமை விற்கப்பட்டுள்ளதாக டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இது கோடம்பாக்க வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. டி.ராஜேந்தரின் இந்த நடவடிக்கைக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
படத்தை வெளியிட்டு பெற்றுள்ள வெற்றிக்குப் பின்னால் 'மாநாடு' தயாரிப்பாளரும் நிதியாளரும் எவ்வளவு இடர்களைத் தாங்கி நின்றார்கள் என்பதை மொத்த திரையுலகமும் அறியும் என்று ராஜேந்தருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
"அப்படிப்பட்ட தயாரிப்பாளர், நிதியாளர் மீது தாங்கள் வழக்குத் தொடுத்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்," என பாரதிராஜா கூறியுள்ளார்.

