திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read

 மோகன்லால், பிரபு நடித்து வெளிவந்த 'மரைக்காயர்' படத்துக்கு கேரளாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, இப்படத்தின் அனைத்துலக வசூல் முதல் நாளே நூறு கோடி ரூபாயை எட்டியுள்ளது.

கேரளாவில் 638 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள இப்படத்துக்கு அடுத்த வாரத்திற்கான திரையரங்க நுழைவுச் சீட்டுகள் முன்பதிவாகி உள்ளதாம். இப்படிப்பட்ட வரவேற்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றி, கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ள மலையாளத் திரையுலகிற்கு ஊக்கமாக அமையும்," என்கிறார் படத்தின் இயக்குநர் பிரியதர்ஷன்.

 பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'பிளட் மணி' திரைப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. இதில் கிஷோர், ஷிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சர்ஜூன் இயக்கியுள்ளார். இதில் பிரியாவுக்கு செய்தியாளர் வேடமாம்.

"முதன்முறையாக செய்தியாளர் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள். செய்தியாளராக வாழ்க்கையை தொடங்கிய நான், இப்போது திரைப்படத்திலும் செய்தியாளராக நடிக்கிறேன்.

"இது பல ஆச்சரியங்களும் திருப்பங்களும் நிறைந்த கதை. இப்படிப்பட்ட படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி," என்கிறார் பிரியா.

இப்படம் டிசம்பர் 24ஆம் தேதி முன்னணி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

 'ஜெய் பீம்' படத்தின் வெற்றியை அடுத்து, சூர்யாவின் படங்களுக்கு திரைச்சந்தையில் மதிப்பு கூடியுள்ளது. இதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளனர்.

இதில் பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 திடீர் உடல்நலக் குறைவு காரணமாக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் சமந்தா. இதுகுறித்து தகவல் அறிந்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவர் இப்போது எப்படி இருக்கிறார், எங்கே உள்ளார்? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதையடுத்து சமந்தா நலமாக இருப்பதாக அவரது மேலாளர் கூறியுள்ளார். லேசான இருமல் இருந்ததால் பரிசோதனை செய்து கொண்ட தாகவும் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 பெங்களூரு விமான நிலைய தாக்குதல் சம்பவம் தொடர்பாக விஜய் சேதுபதி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் அவருக்கும் அவரது மேலாளர் ஜான்சனுக்கும் ஜனவரி 4ஆம் தேதி நேரில் முன்னிலையாகுமாறு சென்னை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.