இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆர்ட்டிக்கிள் 15' படத்தை தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் மறுபதிப்பு செய்து வருகிறார் அருண்ராஜா காமராஜ். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக உதயநிதி மிடுக்குடன் காட்சியளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
இது என்ன மாதிரியான படம் என்று கேட்டால் விலாவாரியாக விவரிக்கிறார் அருண்ராஜா காமராஜ்.
"இது அநீதிக்கு எதிரான நீதியின் குரல். அநீதி என்பது எங்கே, எப்படி வேண்டுமானாலும் எந்த வடிவத்திலும் நடந்துகொண்டேதான் இருக்கும். அதற்கு நிறைய முகங்கள் உண்டு. அதற்குப் பின்புலங்கள் உள்ளன.
"ஒவ்வொரு இடத்திலும் சரியான இடத்தில் ஆட்கள் இருந்துகொண்டு தவறான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி பின்புலங்களை எதிர்த்து வருகிற நீதியின் குரல் என்னவாக, எப்படிப்பட்டதாக இருக்கும் எனும் கேள்வி எழுகிறது. அதற்கான பதில்தான் 'நெஞ்சுக்கு நீதி'.
"இங்கே எல்லாவற்றுக்கும் சட்டப்படியான தீர்வு உள்ளது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதற்கு என்னென்ன சிரமங்களை, சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை அலசி உள்ளோம்," என்கிறார் அருண்ராஜா காமராஜ்.
உதயநிதியின் உழைப்பு தம்மை அசர வைத்ததாகக் குறிப்பிடுபவர், ஒரு கதைக்கு என்ன தேவை என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் உதயநிதியிடம் அதிகமாக உள்ளது என்கிறார்.
"இயக்குநரின் விருப்பத்தை அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுகிறார் உதயநிதி. தனது கதாபாத்திரத்துக்கு என்னென்ன தேவையோ, அதைக் குறைவின்றித் தருகிறார்.
"கொரோனா தொற்றில் என் மனைவி இறந்துபோனபோது மிகவும் ஆறுதலாக இருந்தார். நோய் சூழலில் சொந்தங்கள் என்னை நெருங்க முடியாமல் இருந்தபோது, உதயநிதி நேரில் வந்து நலம் விசாரித்தார். இதையெல்லாம் மதிப்பிடவே முடியாது. பிறகு எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது, அதிலிருந்தும் என்னை மீட்டுக்கொண்டு வந்ததில் அவருக்கு முக்கியப் பங்குள்ளது," என்கிறார் அருண்ராஜா காமராஜ்.
'ஆர்ட்டிக்கிள் 15' படத்தில் அரசியலும் திகிலும் அதிகமாக இருக்கும் எனில், 'நெஞ்சுக்கு நீதி'யில் அரசியல் நெடிதான் அதிகம் இருக்குமாம். மேலும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களையும் செய்துள்ளனர். உதயநிதி முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
"இது சாதி எதிர்ப்பு, சமூகநீதியைப் பற்றிப் பேசும் அரசியல் படம். எனவே தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் நெருக்கமானதாக இருக்கும். இதன் காரணமாக உதயநிதி மிகுந்த ஆர்வத்துடன் நடித்தார்.
"சமூகநீதியைப் பற்றி பேசும் படம் என்பதால் 'நெஞ்சுக்கு நீதி' என்பதுதான் பொருத்தமான தலைப்பாக இருக்கும். மேலும், 'நெஞ்சுக்கு நீதி' என்பது காலஞ்சென்ற முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சுயசரிதைத் தலைப்பு என்பது எல்லாருக்கும் தெரியும். அவரும் சமூக நீதிக்காகப் போராடியவர் என்பது வரலாறு.
"இந்தத் தலைப்பை நான் சொன்னபோது, 'அப்பாவிடம் சொல்லி அனுமதி பெற வேண்டும்' என்றார் உதயநிதி. முதல்வரும் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து, தலைப்பு கிடைத்துவிட்டது.
"இந்தப் படத்துக்காக என்னைத் தவிர மேலும் பலர் உழைத்துள்ளனர். தான்யா ரவிச்சந்திரன்தான் நாயகி. மிக இயல்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நடித்துள்ளார். பாடலாசிரியர் யுகபாரதி தொடக்கம் முதல் உறுதுணையாக இருந்ததுடன், இரண்டு பாடல்களையும் எழுதி உள்ளார். நானும் இரண்டு பாடல்களை எழுதி உள்ளேன்.
"இன்று வெளிப்படையாக அரசியல் பேசும் படங்கள் தமிழில் வரத்தொடங்கிவிட்டன. அந்த வகையில் 'நெஞ்சுக்கு நீதி'யும் முக்கியமான அரசியல் படமாக இருக்கும். எனக்கும் உதய்க்கும் ஒரு நல்ல படத்தை உருவாக்கிய மனநிறைவு உள்ளது. மக்களுக்கும் அந்த மனநிறைவு ஏற்பட்டால் இது ஒரு வெற்றிப்படமாக மாறும்," என்கிறார் அருண்ராஜா காமராஜ்.
இந்தப் படம் விரைவில் திரைகாணும் என்பவர், உதயநிதியின் நடிப்பு வெகுவாக மெருகேறி உள்ளது என்கிறார்.

