'இது அரசியல் பேசும் படம்'

'இது அரசியல் பேசும் படம்'

3 mins read
1edf881e-66ff-4d98-b295-ce02f8e2667c
-

இந்­தி­யில் வெளி­யாகி வெற்றி பெற்ற 'ஆர்ட்டிக்கிள் 15' படத்தை தமி­ழில் 'நெஞ்­சுக்கு நீதி' என்ற தலைப்­பில் மறு­ப­திப்பு செய்து வரு­கி­றார் அருண்­ராஜா காம­ராஜ். உத­ய­நிதி ஸ்டா­லின் நாய­க­னாக நடிக்­கி­றார்.

காவல்­துறை அதி­கா­ரி­யாக உத­ய­நிதி மிடுக்கு­டன் காட்­சி­ய­ளிக்­கும் புகைப்­ப­டங்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் வலம் வரு­கின்­றன.

இது என்ன மாதி­ரி­யான படம் என்று கேட்­டால் விலா­வா­ரி­யாக விவ­ரிக்­கி­றார் அருண்­ராஜா காம­ராஜ்.

"இது அநீ­திக்கு எதி­ரான நீதி­யின் குரல். அநீதி என்­பது எங்கே, எப்­படி வேண்­டு­மா­னா­லும் எந்த வடி­வத்­தி­லும் நடந்­து­கொண்­டே­தான் இருக்­கும். அதற்கு நிறைய முகங்­கள் உண்டு. அதற்­குப் பின்­பு­லங்­கள் உள்­ளன.

"ஒவ்­வொரு இடத்­தி­லும் சரி­யான இடத்­தில் ஆட்­கள் இருந்­து­கொண்டு தவ­றான வேலை­க­ளைச் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். அந்த மாதிரி பின்­பு­லங்­களை எதிர்த்து வரு­கிற நீதி­யின் குரல் என்­ன­வாக, எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்­கும் எனும் கேள்வி எழு­கிறது. அதற்­கான பதில்­தான் 'நெஞ்­சுக்கு நீதி'.

"இங்கே எல்­லா­வற்­றுக்­கும் சட்­டப்­ப­டி­யான தீர்வு உள்­ளது. ஆனால் அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு என்­னென்ன சிர­மங்­களை, சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டி இருக்­கும் என்­பதை அலசி உள்­ளோம்," என்­கி­றார் அருண்­ராஜா காம­ராஜ்.

உத­ய­நி­தி­யின் உழைப்பு தம்மை அசர வைத்­த­தா­கக் குறிப்­பி­டு­பவர், ஒரு கதைக்கு என்ன தேவை என்­பதை தெரிந்துகொள்­ளும் ஆர்­வம் உத­ய­நி­தி­யி­டம் அதி­க­மாக உள்­ளது என்­கி­றார்.

"இயக்­கு­ந­ரின் விருப்­பத்தை அறிந்­து­கொண்டு அதற்­கேற்­ப செயல்­ப­டு­கி­றார் உத­ய­நிதி. தனது கதா­பாத்­தி­ரத்­துக்கு என்­னென்ன தேவையோ, அதைக் குறை­வின்­றித் தரு­கி­றார்.

"கொரோ­னா தொற்­றில் என் மனைவி இறந்து­போ­ன­போது மிக­வும் ஆறு­த­லாக இருந்­தார். நோய் சூழ­லில் சொந்­தங்­கள் என்னை நெருங்க முடி­யா­மல் இருந்­த­போது, உத­ய­நிதி நேரில் வந்து நலம் விசா­ரித்­தார். இதை­யெல்­லாம் மதிப்­பி­டவே முடி­யாது. பிறகு எனக்கு கொரோனா தொற்று ஏற்­பட்­ட­போது, அதி­லிருந்­தும் என்னை மீட்­டுக்­கொண்டு வந்­த­தில் அவ­ருக்கு முக்­கி­யப் பங்­குள்­ளது," என்­கி­றார் அருண்­ராஜா காம­ராஜ்.

'ஆர்ட்­டிக்­கிள் 15' படத்­தில் அர­சி­ய­லும் திகி­லும் அதி­க­மாக இருக்­கும் எனில், 'நெஞ்­சுக்கு நீதி'யில் அர­சி­யல் நெடி­தான் அதி­கம் இருக்­கு­மாம். மேலும், தமிழ் ரசி­கர்­க­ளுக்கு ஏற்ற மாதிரி சில மாற்­றங்­க­ளை­யும் செய்­துள்­ள­னர். உத­ய­நிதி முதன்­மு­றை­யாக காவல்­துறை அதி­கா­ரி­யாக நடிக்­கி­றார்.

"இது சாதி எதிர்ப்பு, சமூ­க­நீ­தி­யைப் பற்­றிப் பேசும் அர­சி­யல் படம். எனவே தமி­ழ­கத்­துக்­கும் தமி­ழக மக்­க­ளுக்­கும் நெருக்­க­மா­ன­தாக இருக்­கும். இதன் கார­ண­மாக உத­ய­நிதி மிகுந்த ஆர்­வத்­து­டன் நடித்­தார்.

"சமூ­க­நீ­தி­யைப் பற்றி பேசும் படம் என்­ப­தால் 'நெஞ்­சுக்கு நீதி' என்­ப­து­தான் பொருத்­த­மான தலைப்­பாக இருக்­கும். மேலும், 'நெஞ்­சுக்கு நீதி' என்­பது காலஞ்­சென்ற முதல்­வர் கலை­ஞர் கரு­ணா­நி­தி­யின் சுய­ச­ரி­தைத் தலைப்பு என்­பது எல்­லா­ருக்­கும் தெரி­யும். அவ­ரும் சமூக நீதிக்­கா­கப் போரா­டி­ய­வர் என்­பது வர­லாறு.

"இந்­தத் தலைப்பை நான் சொன்­ன­போது, 'அப்­பா­வி­டம் சொல்லி அனு­மதி பெற வேண்­டும்' என்­றார் உத­ய­நிதி. முதல்­வ­ரும் பச்­சைக்­கொடி காட்­டி­யதை அடுத்து, தலைப்பு கிடைத்­து­விட்­டது.

"இந்­தப் படத்­துக்­காக என்­னைத் தவிர மேலும் பலர் உழைத்­துள்­ள­னர். தான்யா ரவிச்­சந்­தி­ரன்­தான் நாயகி. மிக இயல்­பா­க­வும் உணர்­வு­பூர்­வ­மாகவும் நடித்­துள்­ளார். பாட­லா­சி­ரி­யர் யுக­பா­ரதி தொடக்­கம் முதல் உறு­து­ணை­யாக இருந்­த­து­டன், இரண்டு பாடல்­க­ளை­யும் எழுதி உள்­ளார். நானும் இரண்டு பாடல்­களை எழுதி உள்­ளேன்.

"இன்று வெளிப்படையாக அரசியல் பேசும் படங்கள் தமிழில் வரத்தொடங்கிவிட்டன. அந்த வகையில் 'நெஞ்சுக்கு நீதி'யும் முக்கியமான அரசியல் படமாக இருக்கும். எனக்கும் உதய்க்கும் ஒரு நல்ல படத்தை உருவாக்கிய மனநிறைவு உள்ளது. மக்களுக்கும் அந்த மனநிறைவு ஏற்பட்டால் இது ஒரு வெற்றிப்படமாக மாறும்," என்­கி­றார் அருண்­ராஜா காம­ராஜ்.

இந்தப் படம் விரைவில் திரைகாணும் என்பவர், உதயநிதியின் நடிப்பு வெகுவாக மெருகேறி உள்ளது என்கிறார்.