வித்தியாசமான, சர்ச்சைக்குரிய சவாலான கதாபாத்திரங்கள் என்றால், இளம் இயக்குநர்கள் ரெஜினாவைத்தான் முதலில் தேடிச்செல்கிறார்கள். அவரும் நடிப்பில் எந்தக் குறையும் வைப்பதில்லை.
'கொரில்லா' படத்தை இயக்கிய, டான் சாண்டி இயக்கும் புதிய படம் 'பிளாஷ்பேக்'. இதில் முதன்முறையாக ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடித்துள்ளார் ரெஜினா. படம் முழுவதும் வந்து போகும் கதாபாத்திரத்தில் தனி முத்திரை பதித்துள்ளதாகப் பாராட்டுகிறார் டான் சாண்டி.
"ரெஜினா எப்படி நடிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படத்தில் அவர் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான நடிப்பை வழங்கி உள்ளார். இந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும் என நம்புகிறேன். அந்த வெற்றியில் ரெஜினாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்," என்று கூறும் சாண்டி, தலைப்புக்கு ஏற்ப படமும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்.
பதின்ம வயது காதல் குறித்து ஆங்கிலத்தில் பல படங்கள் வந்திருப்பதாக குறிப்பிடுபவர், கடந்த 35 ஆண்டுகளில் தமிழில் பாலுமகேந்திரா மட்டுமே 'அழியாத கோலங்கள்' என்ற தலைப்பில் அதுகுறித்து அலசி இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
"பாலுமகேந்திரா சாருக்குப் பிறகு யாரும் இந்த முயற்சியில் ஈடுபடவில்லை. சில படங்கள் இந்த விஷயத்தை கொஞ்சமாக சொல்லி இருந்தாலும், முழுநீளப் படங்கள் வெளிவரவில்லை.
"காதல் எவ்வளவு அழகோ, அதேபோல் காமமும் அழகு என்பார்கள். இந்தக் காதலும் காமமும் கலந்த மாயத்தை இதில் முயற்சி செய்து பார்த்திருக்கேன். அன்பு, நம்பிக்கை, காதல், உண்மை, பொய் என அனைத்தும் இந்த 'பிளாஷ்பேக்'கில் இருக்கும்," என்கிறார் சாண்டி.
இப்படத்தின் நாயகன் பிரபுதேவா, சாண்டி சொன்ன கதையைக் கேட்டு வெகுவாகப் பாராட்டினாராம். கத்திமேல் நடப்பதுபோன்ற கதை, கதாபாத்திரத்தில் அவர் நடிக்க முன்வந்தது பெரிய விஷயம் என்கிறார் இயக்குநர்.
"இதில் அடிதடி, சண்டைக்காட்சிகள் இல்லை. அமைதியாக இருந்து சாதிக்கும் வேடத்தில் நடித்துள்ளார் பிரபுதேவா. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் இந்தப் படத்துடன் தங்களைப் பொருத்திக்கொள்ள முடியும். அதன் மூலம் பசுமையான நினைவுகளை அசைபோட முடியும். அதை மனதாரச் செய்யுங்கள்," என்கிறார் டான் சாண்டி.

