முருகேஸ் பூபதி இயக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் லட்சுமி மேனன் (படம்). காதலும் நகைச்சுவையும் கொண்ட கதைக்களத்துடன் தயாராகும் இப்படத்தில் யோகிபாபு நாயகனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவை ஒருதலையாகக் காதலிப்பார் யோகிபாபு. ஆனால் புதுப்படத்தில் அப்படி இல்லையாம். கதைப்படி லட்சுமி மேனன் இவரைக் காதலிப்பதாக உள்ளதாம். படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
பெரும் எதிர் பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த 'புஷ்பா' படம் வெளியான முதல் நாளன்றே ரூ.71 கோடி வசூல் கண்டுள்ளது. இதை அப்படத்தின் தயாரிப்பு தரப்பு உறுதி செய்துள்ளது. பெரிதாக விளம்பரரப் படுத்தாவிட்டாலும் மும்பையில் மட்டும் ரூ.3 கோடி வசூல் கண்டுள்ளதாம். பிற மொழிகளில் ஓரளவு விளம்பரப்படுத்தி இருந்தால் வசூல் அதிகரித்திருக்கும் எனப் பட நாயகன் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
'வீரமே வாகை சூடும்', 'லத்தி' ஆகிய இரு படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் விஷால், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 'எனிமி' படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார்தான் இப்புதிய படத்தையும் தயாரிக்க உள்ளார். இதையடுத்து விஷால் இயக்கும் 'துப்பறிவாளர்-2' படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தமது ரசிகரின் மகளுக்கு காணொளி மூலம் ஆறுதல் கூறியுள்ளார் ரஜினி (படம்). அந்தக் காணொளிப் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த அந்த ரசிகர் இதற்காக ரஜினிக்கு நன்றி தெரி வித்துள்ளார்.
"சவுமியா கண்ணா எப்படி இருக்க... பயப்பட வேண்டாம். உனக்கு ஒன்றும் இல்லை. தைரியமாக இருக்க வேண்டும். எனக்கு உடல்நலம் சற்று சரியில்லை. அதனால் நேரில் வர முடியவில்லை. உனக்காக ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்," என்று ஆறுதல் கூறியுள்ளார் ரஜினி.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்திப் படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். ஏற்கெனவே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அண்மையில் வெளியான 'டிக்கிலோனா' படத்தில் நடித்திருந்தார். மற்றொரு வீரரான இர்ஃபான் பதான் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'கோப்ரா' படத்தில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழ்த் திரையுலகில் சாதி வேற்றுமை இருக்கிறது என்ற நிலைப்பாட்டில் தாம் தெளிவாக இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். சினிமாவுக்கு சாதி, மதம் எதுவும் கிடையாது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதை தம்மால் ஏற்க இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். "தமிழ்த் திரையுலகில் சாதி வேற்றுமையை நான் உணரவும் செய்கிறேன்," என்று ரஞ்சித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

