ஒரு படத்தை மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதில்தான் அதன் வெற்றி அடங்கி இருக்கிறது என்கிறார் ஜிவி. பிரகாஷ்.
இவரும் திவ்யபாரதியும் இணைந்து நடித்துள்ள 'பேச்சிலர்' படம் கடந்த 3ஆம் தேதி வெளியீடு கண்டது. திருமணத்துக்கு முன்பே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது குறித்து இந்தப் படத்தில் அலசியுள்ளனர்.
வசூல் ரீதியில் லாபம் என்றாலும் சில விமர்சகர்கள் படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இப்படக்குழுவினர் நேற்று முன்தினம் செய்தியாளர் களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஜிவி. பிரகாஷ், 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்திற்குப் பிறகு தாம் நடித்த படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்றார்.
"இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளதை நினைத்து மகிழ்கிறேன். ஒரு படத்திற்கு இவ்வளவு செலவாகும் என்று தீர்மானித்து வடிவமைத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரும் இயக்குனரும் தான்.
"இந்தப் 'பேச்சிலர்' படம் ரசிகர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தப் படம் மூன்றாவது வாரத்தைக் கடந்திருக்கிறது. ஊடகங்கள் கூறிய அறிவுரை, விமர்சனங்களுக்குப் பெரிய நன்றி.
"ரசிகர்கள் உட்பட அனைவரும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் எங்களைத் திருத்திக் கொள்கிறேன்," என்றார் ஜிவி.

