'பிசாசு 2' படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. அதைப் பார்க்கும் அனைவரும் பயத்தின் உச்சிக்குச் செல்லப்போகிறார்கள் என்கிறார் இயக்குநர் மிஷ்கின். அது மட்டுமல்ல, படத்தின் நாயகி ஆண்ட்ரியா இனி புதிய உயரங்களை எட்டிப் பிடிப்பார் என்றும் உறுதியாகச் சொல்கிறார்.
அண்மைய பேட்டி ஒன்றில் ஆண்ட்ரியாவை அவர் பாராட்டிய விதம் குறித்து கோடம்பாக்கத்தில் தனி விவாதமே நடந்துகொண்டிருக்கிறது. ஆண்களுக்கு நிகரான உழைப்பை ஆண்ட்ரியா 'பிசாசு 2' படத்துக்குக் கொடுத்துள்ளார் என்றும் இனி இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகையாக அவர் உருவெடுப்பார் என்றும் உறுதியாகச் சொல்கிறார் மிஷ்கின். அந்தப் பேட்டியில் ஆண்ட்ரியாவை 'அவள், இவள்' என்றுதான் குறிப்பிட்டுள்ளார். தனது நெருங்கிய தோழி என்பதால் அவர் தம்மை தவறாக நினைக்கமாட்டார் என்றும் சொல்கிறார்.
"இந்தப் படத்தின் கதையை அவரிடம் (ஆண்ட்ரியா) சொன்னபோது அவர் உடல்மொழியைக் கவனித்தேன். மிக உன்னிப்பாகக் கேட்டவர், அருமையான கதை என்று சொல்லி நடிக்க முன்வந்தார்.
"இந்தக் கதையில் காமத்துக்கும் இடம் உள்ளது. அந்தப் பகுதிகளைக் கேட்ட பிறகு, அதிக சம்பளம் வேண்டும் என்றார். நான் அதற்கு ஒப்புக்கொண்டதும், ஒற்றை ஆள்காட்டி விரலை உயர்த்திக் காட்ட, அதற்கும் சம்மதித்தேன். இதில் அவருக்கு மிகுந்த ஆச்சரியம். நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்கிறோம். ஆண்ட்ரியா போன்ற திறமையான நடிகைகளுக்கும் அத்தகைய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.
"ஆனால் படப்பிடிப்பு தொடங்கியதும் நிலைமையில் தலைகீழ் மாற்றம். மொத்தம் அறுபது நாள்கள் படப்பிடிப்பு. இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதில் நாற்பது நாள்கள் எனக்கும் அவருக்கும் எப்போதும் சண்டைதான். ஏதாவது ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் வாக்குவாதம் செய்வோம்.
"ஒரு கட்டத்தில் நானே வெறுத்துப் போனேன். ஏன் இப்படிச் செய்கிறாய் என்று அவரிடமே கேட்டுவிட்டேன். அப்போது அவரும் மனம்விட்டுப் பேசினார். 'என்னால் இந்தக் கதாபாத்திரத்தின் சுமையைத் தாங்க முடியவில்லை. பல்வேறு வகையில் மன அழுத்தத்துக்கு ஆளாகிறேன். ஒருவித மனப் பிறழ்வு ஏற்பட்டதாக உணர்கிறேன்' என்றார். ஒரு இயக்குநராக அவரது நிலைமையைப் புரிந்துகொண்டேன்.
"அதன் பிறகு, 'இனி உங்களுடன் எந்த வகையிலும் மோதமாட்டேன் என்றேன். இரு கைகள் தட்டினால்தான் ஓசை. இனி உங்கள் கை மட்டுமே செயல்படட்டும்' என்று அவரிடம் கூறினேன்.
"பின்னர் படப்பிடிப்பு சுமுகமாக நடைபெற்றது. கடைசி பத்து நாள்களில் அவர் மிகவும் அமைதியாகிவிட்டார். அது ஓர் அசாதாரண அமைதி. அப்படிப்பட்ட பக்குவம் அவரிடம் ஏற்பட்டு இருந்தது.
"படப்பிடிப்பின் கடைசி நாளன்று மொத்தப் படக்குழுவையும் திரட்டி சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். நான் 12 படங்களில் பணியாற்றி உள்ளேன். அதில் நடித்த நடிகர்களைவிட மிகச் சிறந்த நடிகராக ஆண்ட்ரியாவைப் பார்க்கிறேன் என்றேன். அவரை நடிகர் என்றுதான் குறிப்பிட்டேன்.
"அவர் கிளம்பிச் சென்றபோது நானே அவரது கார் கதவைத் திறந்துவிட்டு வழியனுப்பினேன். என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவின் மிக முக்கியமான, மேன்மையான நடிகை என்று அவரைக் குறிப்பிடுவேன்.
"அண்மையில் பின்னணிக் குரல் பதிவு முடிந்தவுடன் என்னைக் கட்டிஅணைத்தார். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இது மிகவும் சிறப்பானது. நல்ல படத்தில் நடிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி என்றார். அதைக் கேட்டதும் எனக்கும் கண்கள் கலங்கிப் போயின.
"ஆண்ட்ரியா போன்ற அசாதாரண நடிப்பை வழங்கக்கூடிய நாயகியை இந்திய சினிமா போற்றிப் பாதுகாக்க வேண்டும்," என்கிறார் மிஷ்கின்.

