'காலம் ஒரு துரோகி' என்ற வசனத்துடன் தொடங்குகிறது 'ராக்கி' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
"சில படங்களின் தலைப்பைக் கேட்ட உடனேயே மனதைக் கவரும். 'ராக்கி'யும் அப்படிப்பட்ட தலைப்புதான். இந்தப் படத்தில் கதாநாயகி என்று யாரும் இல்லை. அதனால் காதலும் இல்லை. படம் முழுவதும் அதிரடிச் சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்கும்," என்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டு பல கதாநாயகர்களை அணுகினாராம். ஆனால் யாரும் நடிக்க முன்வரவில்லை. கடைசியாக வசந்த் ரவியை சந்தித்துள்ளார். கதை கேட்ட உடனேயே நடிக்கச் சம்மதித்த அவர், தயாரிப்பாளரையும் தேடிப்பிடித்து அறிமுகம் செய்து வைத்தாராம்.
தொடக்கத்தில் 'ஜானி' என்ற தலைப்பைத்தான் தேர்வு செய்துள்ளார் அருண். பிறகு படத்தில் தலைப்பிலும் ஒருவித முரட்டுத்தனம் இருக்கவேண்டும் எனக் கருதியவர், 'ராக்கி' என்று தலைப்பு வைத்துள்ளார்.
"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. கொரோனா நெருக்கடி காரணமாக தொழில்நுட்பப் பணிகள் தாமதமடைந்து, ஒருவழியாக இப்போதுதான் வெளியீடு காணத் தயாராக உள்ளது," என்கிறார் அருண் மாதேஸ்வரன்.
'ராக்கி'யை நயன்தாரா, விக்னேஷ்சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' வெளியிடப் போகிறது. அருணும் விக்னேஷ் சிவனும் ஒரே படத்தில் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்தவர்களாம். அப்போது ஏற்பட்ட நட்பு இப்போது கைகொடுத்துள்ளது.
"இந்தக் கதைக்கு பாரதிராஜா சார்தான் கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளார். அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிப்பதாக இருந்தது. அவர் படம் இயக்குவதில் முனைப்பாக இருந்ததால் பாரதிராஜா எங்களுடன் இணைந்தாா். எதிர்மறை கதாபாத்திரத்தில் அசத்தி உள்ளார்," என்கிறார் அருண் மாதேஸ்வரன்.
இவர் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சாணி காயிதம்' படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.

