'யூடியூப்' தளத்தை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு சிறுவன் ரித்விக்கை தெரிந்திருக்கும். தனி ஒருவனாக ஆண், பெண், இளமையான, வயதான கதாபாத்திரங்கள் எனப் பலவிதமாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளான்
இச்சிறுவன். ரித்விக் வெளியிடும் காணொளிகளை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நயன்தாரா நடிக்கும் 'ஓ2' (ஆக்சிஜன்) என்ற புதிய படத்தில் ரித்விக்கை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். முதல் படத்திலேயே இச்சிறுவனுக்கு முக்கியமான கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாய் தன்ஷிகாவை தமிழில் அதிகம் காண முடிவதில்லை. விசாரித்தால், தெலுங்கில் கவனம் செலுத்துவதாக தகவல் கிடைக்கிறது.
தற்போது 'யோகிடா' என்ற தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறாராம். மேலும் 'ஷிகாரு' என்ற தெலுங்குப் படத்திலும் ஒருசேர நடித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்த மாதம் வெளியாக உள்ள 'ஷிகாரு' முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகி உள்ளது. இதில் தேவிகா என்ற சராசரிப் பெண்ணாக நடிக்கிறார் சாய் தன்ஷிகா.
"பல்வேறு தடைகளைக் கடந்து இந்த இளம்பெண் எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்பதுதான் கதை. பல காட்சிகள் மிக சுவாரசியமாகவும் பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் வகையிலும் இருக்கும்," என்கிறார் சாய் தன்ஷிகா.
'ரைட்டர்' என்ற படத்தில் முதல் முறையாக பெண் காவலர் வேடத்தில் நடித்துள்ளார் இனியா. இதில், தமது நடிப்பு ரசிகர்களால் நிச்சயம் பாராட்டப்படும் என்கிறார்.
"இதற்கு முன் பல நடிகை கள் பெண் காவலராக நடித்துள்ளனர். ஆனால், நான் குதிரைப் படையைச் சேர்ந்த பெண் காவலராக நடித்துள்ளேன். இதற்காக குதிரை ஏற்றப் பயிற்சி பெற்றேன்.
"இந்தப் படத்தில் எனக்கு சில சண்டைக்காட்சிகளும் உள்ளன. அவற்றில் பங்கேற்றபோது காயம் ஏற்பட்டது. எனினும், அதைப் பொருட்படுத்தாமல் நடித்து முடித்தேன். என்னைப் போலவே மற்றவர்களும் கடுமையாக உழைத்துள்ளனர். அந்த உழைப்பு வீண் போகாது என உறுதியாக நம்புகிறேன்," என்கிறார் இனியா.
தெலுங்கு முன்னணி நாயகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனா வும் காதலிப்பதாக நீண்ட காலமாக ஒரு தகவல் வலம் வருகிறது. அவர்கள் இருவரும் இது குறித்து வாய் திறந்ததே இல்லை. இந்நிலையில், அண்மைய சில நிகழ்வுகள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்வதாக சிலர் கூறுகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்பு பாரிஸ் நகருக்குச் சென்றிருந்தார் விஜய் தேவரகொண்டா. அடுத்து சில தினங்களில் ராஷ்மிகாவும் அங்கு பறந்துவிட்டார்.
சில தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர தங்குவிடுதியின் பின்புறமாக விஜய்யும் ராஷ்மிகாவும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கு ஊடகங்கள் இதுகுறித்து பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

