"வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அது கிடைத்த பிறகு மாறிவிடக் கூடாது," என்று மாநாடு படத்தின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது கோடம்பாக்க வட்டாரங்களில் விவாதங்களை எழுப்பி உள்ளது.
நடிகர் விஜய்யின் தந்தையுமான அவர், மாநாடு நாயகன் சிம்புவுக்கு அறிவுரை கூறும் வகையில் பேசினார். வெற்றி நிகழ்வுக்கு சிம்புவும் வந்திருக்க வேண்டும் என்றார் எஸ்ஏசி.
"சிம்புவுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு திருப்புமுனைதான். அவரை நம்பி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து, படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
"இந்நிலையில், படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த மகிழ்ச்சியை நம்முடன் சேர்ந்து கொண்டாட வேண்டிய சிம்பு இங்கு இல்லை. அவர் இங்கு வந்து வெற்றியைக் கொண்டாடி இருக்க வேண்டும். ஒரு படத்தின் வெற்றியைக் கொண்டாட அதன் நாயகன் இருக்க வேண்டும் என்பது அவருக்கும் தெரிந்திருக்கும். படப்பிடிப்பின்போது எப்படி இருந்தோமோ, வெற்றிக்குப் பிறகும் அப்படியே இருக்க வேண்டும். அப்போதுதான் இன்னொரு வெற்றி கிடைக்கும்," என்றார் எஸ்ஏசி.
'மாநாடு' படத்தின் செயற்கைக்கோள், பிறமொழி உரிமங்களை விற்ற வகையில் சிம்பு தரப்புக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

