தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் அதிக படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர்.
சம்பள விஷயத்தில் இவர் கறார் காட்டவில்லை என்றாலும், தயாரிப்பாளர்களோ அவர் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராக உள்ளனர்.
இத்தனைக்கும் தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் பிரியா ஏற்பதில்லை. ஒவ்வொரு படத்தின் கதையும் தனக்கான கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார்.
அந்த வகையில் சர்ஜுன் இயக்கத்தில் பிரியா நடித்துள்ள 'பிளட் மணி' திரைப்படம் நாளை வெளியீடு காண உள்ளது. இந்நிலையில், இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய படத்தின் திரைக்கதை ஆசிரியர் சங்கரதாஸ், மிக திறமைவாய்ந்த ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
"இந்த கதையில் வரும் பெண் கதாபாத்திரம் மிகவும் வலுவானது. அத்தகைய வேடத்தில் பிரியா பவானி சங்கர் நடிப்பது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. அவர் தாம் இயக்கும் அனைத்து கதாபாத்திரங்களிலும் அர்ப்பணிப்புடன் நடிப்பதைக் கவனித்து வருகிறேன்.
"மேலும் ஷிரிஷ், கிஷோர் என இப்படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்," என்றார் சங்கரதாஸ்.
பிரியா பவானி சங்கர் பேசியபோது, நன்றி என்ற வார்த்தைதான் அவரால் அதிக முறை உச்சரிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு அவரை இயக்குநர் நெல்சன் தான் பரிந்துரை செய்தாராம். அவரால்தான் தமக்கு இந்த நல்ல வாய்ப்பு கிடைத்தது என்றார்.
"நெல்சனுக்கு மட்டுமல்ல, இந்தப் படத்தில் நடித்ததை சிறந்த அனுபவமாக மாற்றிய இயக்குநர் சர்ஜுனுக்கு நன்றி. ராமேஸ்வரத்தில் கொளுத்திய வெயிலில் பல முக்கிய காட்சிகளைப் படமாக்கினோம்.
"அதனால் திரையில் தோன்றும்போது என் முகம் எப்படி காட்சியளிக்குமோ எனும் கவலை ஏற்பட்டது. ஆனால் என்னை மட்டுமல்ல, படத்தில் நடித்த அனைவரையுமே மிக அழகாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாலா. இதற்காகவும் அவர் காட்டிய பொறுமைக்காகவும் நன்றி சொல்ல வேண்டும்.
"எங்களிடம் அழகான கதை இருக்கிறது. அதை உங்களுக்காகக் காட்சிப்படுத்தி உள்ளோம். ரசிகர்களின் ஆதரவு இருந்தால் படம் பெரிய வெற்றியைப் பெறும்.
"தமிழ் ரசிகர்கள் நல்ல படைப்புகளை ஆதரிக்கத் தவறியதில்லை என்பார்கள். அதை நான் முழுமையாக நம்புகிறேன்," என்றார் பிரியா பவானி சங்கர்.
இயக்குநர் சர்ஜுன் பேசுகையில், ஓடிடி தளங்கள் அதிகரித்திருப்பது நல்ல விஷயம் என்றார். அவரும் மறக்காமல் பிரியாவைப் பாராட்டினார்.
"பிரியாவைப் பொறுத்தவரை இந்தத் துறைக்கு ஏற்ற நிபுணத்துவம் கொண்டவர். ஒருநாள் கூட அவர் படப்பிடிப்புக்குத் தாமதமாக வந்தது கிடையாது. அதேபோல், தமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றெல்லாம் தொல்லை தரமாட்டார்.
"படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருப்பவர், தனக்கான காட்சி படமாக்கப்படும்போதுதான் வாய் திறப்பார். அவரது மிகக் கச்சித மான நடிப்பு படத்துக்குப் பலம் சேர்த்துள்ளது," என்றார் இயக்குநர் சர்ஜுன்.
கொரோனா நெருக்கடி தங்களையும் பாதித்ததாகக் குறிப்பிட்ட அவர், தயாரிப்பாளர் இர்பான் மாலிக், படம் முடியும் வரை ஒருமுறை கூட சலிப்படையாமல், நம்பிக்கை இழக்காமல் இருந்ததற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
இந்தப் படம் முழுநீள திகில் படைப்பாக உருவாகி உள்ளது. பிரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மற்றவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம்.
கிஷோர், ஷிரிஷ் தவிர பஞ்சு சுப்பு, 'ராட்சசன்' வினோத் சாகர், ஸ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர்.
"திகில் படம் என்பதால் பின்னணி இசை மிகவும் முக்கியம். அந்தப் பணியை இசைஅமைப்பாளர் சதீஷ் ரகுநந்தன் எந்தக் குறையும் இன்றி செய்துள்ளார். அவரது இசை ஒவ்வொரு காட்சியையும் விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல உதவி இருக்கிறது. அனைவரும் பொறுப்பை உணர்ந்து, அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம்.
"படம் இன்றைய இளம் தலைமுறையினரை மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் நல்ல படைப்பாக இருக்கும்," என்கிறார் இயக்குநர் சர்ஜுன்.

