''சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற தலைப்பில் புதுப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட் இயக்குகிறார்.
வெவ்வேறு சமூகச் சூழ்நிலை களில் உள்ள நான்கு பேர், தெரிந்தோ தெரியாமலோ ஒரு சம்பவத்தில் சம்பந்தப்படுகிறார்கள். அந்தச் சம்பவம் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தைக் கொண்டு வருகிறது, எந்த வகையில் பாதிக்கிறது என்பதுதான் கதை. இதில் அசோக் செல்வன் நாயகனாகவும் 'பிக்பாஸ்' ரித்விகா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்தத் தலைப்பை வைப்பதற்கு காலஞ்சென்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதே தலைப்பில்தான் அவர் தனது மிகச்சிறந்த படைப்பை வழங்கியுள்ளார்.
ஜெயகாந்தனின் இந்த நாவலுக்கும் தனது படத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்கிறார் விஷால் வெங்கட்.
"இன்றைய தலைமுறைக்கு அழுத்தம் திருத்தமாக ஒரு கதையைச் சொல்ல விரும்பினேன். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற தலைப்பு என் கதைக்குப் பொருத்தமாக இருந்தது.
"இது கதாபாத்திரங்களின் வழியே போகும் கதை. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப கதை நகரும். இவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. நம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவர்கள், நம் நண்பர்களைப் போன்றவர்கள். நம் அண்டை வீட்டுக்காரராகவும் இருக்கலாம். சில சமயம் நம் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் உணர்வும் ஏற்படும்," என்கிறார் விஷால் வெங்கட்.
அசோக் செல்வன், மணிகண்டன், கே.எஸ்.ரவிக்குமார், பானு ப்ரியா என அனைவருமே கச்சிதமான நடிப்பை வழங்கி இருப்பதாகச் சொல்பவர், கதைக்கேற்ற ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அமைந்தது கூடுதல் பலம் சேர்த்துள்ளது என்கிறார்.
"அசோக் செல்வன் நிறைய ரசிகைகளைக் கொண்டிருப்பவர். நடிகர் நாசரின் மகன் அபிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'ஜெய்பீம்' படத்துக்குப் பிறகு மணிகண்டன் இன்னும் பளிச்சென்று தெரிகிறார்.
"ரெயா, அஞ்சு குரியன், இளவரசு என அனுபவத்தில் சிறந்தவர்கள் இருக்கிறார்கள். கனவுகள், உறவுகள், பிரிவுகள் என வந்து சேர்கிற துயரங்கள், நாமாகத் தேடிக்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் கதாபாத்திரங்களாக இவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர்."
தலைப்பு மாற வாய்ப்புண்டா?
"இப்போதுதான் அந்த எதிர்ப்பு எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. இதைப் பற்றி யோசிக்க இன்னும் அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால், பெயர் தவிர அந்த நாவலுக்கும் படத்தின் கதைக்கும் துளியும் தொடர்பு கிடையாது," என்கிறார் விஷால் வெங்கட்.
, :

