உலகெங்கும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பலரும் தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். தங்களுக்கு வேலை இருந்தாலே போதும் என்று பாதி சம்பளத்தில் பலர் வேலை செய்து வருகின்றனர். ஆனால் இந்த நிலையிலும் தங்கள் சம்பளத்தை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்த்தி வருபவர்கள் நடிகர்கள்தான். மலையாளத் திரையில் நடிக்கும் நடிகர்கள் இன்னும் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை நெருங்கவே போராடிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நடிக்கும் நாயகர்கள் தங்கள் சம்பளத்தை ரூ.100 கோடிக்கும் அதிகமாக உயர்த்தி இருக்கிறார்கள். அவர்கள் கேட்ட தொகையைக் கொடுத்து அவர்களைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ரசிகர்கள் திரையரங்குகளில் உற்சாகமாக கைத்தட்டி திரைப்படத்தை வெற்றியடையச் செய்யும்போது நடிகர்கள் தங்கள் சம்பளங்களை உயர்த்துகிறார்கள்.
2021ன் இறுதியில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நடிகர்கள் சம்பளங்கள் உங்களின் பார்வைக்கு....
தமிழக நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் எப்போதும் சூப்பர் ஸ்டாராகவே இருந்து வருகிறார்.
தென்னிந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் இவரது படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அவருடைய ஒரு சில படங்கள் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் வசூலில் சாதனை புரிந்துள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்திற்கு ரூ.100 கோடி வரை சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு நிலவரப்படி ரஜினியின் மொத்த சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.365 கோடி.
டொயோட்டா இன்னோவா, ரேஞ்ச் ரோவர், பென்ட்லி ஆகிய மூன்று கார்கள் தன்னுடைய சொந்த உபயோகத்திற்கு வைத்திருக்கிறார்.
இவர் ரூ.100 முதல் ரூ.120 கோடிகளை முதலீடு செய்துள்ளார். ரஜினிக்கு மாதத்திற்கு ரூ.3 கோடி வரை வருமானம் வருவதாகக் கூறப்படுகிறது.
இரண்டாம் இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடித்து அண்மையில் வெளியான 'மாஸ்டர்' படத்திற்கு ரூ.80 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக ஐ.டி விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
அடுத்தடுத்து வெளியாகும் விஜய்யின் படங்கள் இவரின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்து வருகின்றன.
இவரின் சொத்து மதிப்பு 56 மில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 410 கோடிகள்.
நடிகர் விஜய்யிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ், ரூ.1.30 கோடி மதிப்பிலான ஆடி, ரூ.75 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யு, ரூ.90 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யு, ரூ.35 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் உள்ளிட்ட கார்களும் விலையுயர்ந்த சைக்கிள்களும் பைக்குகளும் உள்ளன.
மூன்றாவது இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித். இவருடைய சம்பளம் 55 கோடி ரூபாய்.
அஜித் தமிழக அளவில் நடிகர் ரஜினிக்கு இணையாக வர்த்தகம் நிகழ்த்தும் நடிகர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
நடிகர் விஜய்யுடன் போட்டி போட்டு தனது சம்பளத்தை உயர்த்தி வந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூரின் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க 55 கோடி ரூபாய்க்கு ஏற்கெனவே ஒப்பந்தமான தால் தற்பொழுது 'வலிமை' வரை தான் முன்னர் அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் வண்ணம் 55 கோடி ரூபாய் ஊதியத்திலேயே நடித்து வருகிறார்.
'வலிமை' திரைப்படம் வெளியீட்டிற்குப் பிறகு அஜித்தின் சம்பளம் மேலும் பல மடங்கு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் 'வலிமை' படத்திற்கு ரூ.80 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக ஒரு சில வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
அஜித் வைத்திருக்கும் லாம்போகினி, பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் கார்கள் மட்டுமே 5 கோடி. ஏப்ரிலியா கபோனார்ட் பைக், பிஎம்டபிள்யூ கே 1300 எஸ் பைக் உட்பட அவருடைய சொத்து 350 கோடி ரூபாய்.
இந்த பட்டியலில் பெரும் போராட்டத்திற்குப் பிறகு நான்காவது இடத்தைத் தக்க வைத்திருக்கிறார் தமிழ் சினிமாவின் உலகநாயகன் என கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன்.
திரைத்துறையில் அறுபத்தி இரண்டு ஆண்டுகளை கடந்த பின்னரும் தமிழ் சினிமாவின் முக்கிய நாயகர்களில் ஒருவராக திகழ்கிறார்.
அண்மைக்காலமாக கமல்ஹாசனின் வர்த்தக எல்லைகள் சுருங்கி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தாலும் தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என பல்வேறு அவதாரங்களில் தன்னைத் தமிழ் சினிமாவில் நிலைநிறுத்தி வருகிறார். இதன் கூட்டுத்தொகையாக சம்பளத்தை கணக்கிட்டு ரூ.55 கோடி வரை தனது ஊதியம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். 'பிக் பாஸ் 5' நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.60 கோடி பேசப்பட்டிருக்கிறது.
இந்த வரிசையில், ஐந்தாவது இடத்தை நடிகர் தனுஷ் எட்டியிருக்கிறார். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, பாலிவுட், ஹாலிவுட் என முன்னேறிக் கொண்டே செல்லும் நடிகர் தனுஷ்.
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு படியாக ஏறி தற்போது உலகளவில் பிரபலமாகி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, பாலிவுட் என இந்தியாவின் பல மொழிகளில் நன்கு அறியப்பட்ட நடிகராக வளர்ந்து வரும் தனுஷ் தற்போது ஹாலிவுட் திரைப் படங்களில் நடிப்பதன் மூலம் ஓர் அனைத்துலக அடையாளத்தைப் பெற்று வருகிறார்.
தனுஷ் தனது திரைப்படங்களுக்கு ரூ.15 கோடி வரை சம்பளமாக பெற்று வந்த நிலையில் அண்மையில் நான்கு மொழிகளில் தயாராகும் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க 50 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷின் முழு சொத்து மதிப்பு சுமார் ரூ.200 கோடி. புதிய வீட்டை போயஸ் கார்டனில் கட்டி வருகிறார். அதன் மதிப்பு இன்றைய விலையில் ரூ.150 கோடி என்று சொல்லப்படுகிறது.

