'மாயோன்' திரைப்படம் ஆறு முதல் அறுபது வயது வரை உள்ள அனைவருக்கும் ஏற்ற படமாக இருக்கும் என்கிறார் அறிமுக இயக்குநர் எம்.கிஷோர்.
தலைப்பைக் கேட்டவுடன் இது பக்திப்படம் என நினைத்து ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார்.
அண்மையில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி அவர்களும் புரிந்து, உணர்ந்துகொள்ளும் வகையில் இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியானது. இந்த வித்தியாசமான முயற்சிக்குப் பலரது பாராட்டுகளும் கிடைத்தது.
"மாயோன்' என்பது சங்க இலக்கியப் பெயர். சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தை 'குறிஞ்சி', 'முல்லை', 'மருதம்', 'நெய்தல்', 'பாலை' என்று ஐந்து வகையாகப் பிரித்தனர். முல்லை நிலப் பகுதியின் இறைவன் மாயோன். அதாவது திருமால்.
"இது கிருஷ்ணர் கோவில் பின்னணியில் நடக்கும் கதை. மாலை ஆறு மணிக்கு மேல் அந்தக் கோவிலில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. அந்தக் கோவிலை மையமாக வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியும் நடக்கிறது. கோவில், திருமால், தொல்பொருள் ஆராய்ச்சி என்று கதையில் பழமை நிறைந்திருந்ததால் 'மாயோன்' என்ற தலைப்பை வைத்தோம்," என்கிறார் இயக்குநர் கிஷோர்.
ஐந்தாயிரம் வருட பழைமை வாய்ந்த கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அப்போது விநோதமான சம்பவங்கள் நடப்பதை அறிந்து ஆராய்ச்சிக்காக நாயகன் சிபிராஜும் அவரது குழுவினரும் அங்கு வருகிறார்கள்.
அவர்கள் எதிர்பாராத வகையில் நடக்கும் சம்பவங்களால் மிரண்டு போவார்களாம். சில சிக்கல்களிலும் சிக்கிக்கொள்வார்களாம். அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.
"கதையின் பின்னணியில் சிலைக்கடத்தல் குறித்தும் விரிவாகச் சொல்லி இருக்கிறோம். மொத்தத்தில், தெய்வீகமும் சாகசங்களும் கலந்த திகில் கதை இது. கதை தயாரானதும் இளையராஜா சாரிடம்தான் முதலில் சென்றேன். அவரைத் தவிர வேறு யாராலும் இந்தக் கதைக்குப் பொருத்தமான இசையை வழங்க முடியாது.
"ராஜா சார் நான் சொன்ன கதையைப் பொறுமையாகக் கேட்டார். அதன் முடிவில் அவர் இசையமைக்கச் சம்மதித்ததும்தான் நிச்சயமாக இது நல்ல கதை என்பது எனக்கே புரிந்தது.
"கதைக்குப் பொருத்தமான நாயகன் என்று யோசித்தபோது, சிபிராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. மேலோட்டமாக அவரிடம் கதையைச் சொன்னதும் ஆர்வமானார். பிறகு இரண்டு மணி நேரம் கேட்ட பிறகு ராஜா சார் இசையமைப்பது குறித்து தெரிவித்தேன். சிபியின் ஆர்வம் மேலும் அதிகமானது. 'ராஜா சார் இசையில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. இதுதான் அவருடன் எனக்கு முதல் படம்' என்று படத்தோடு ஐக்கியமாகிவிட்டார்.
சிபி இதில் அர்ஜுன் மணிமாறன் என்ற அகழ்வாராய்ச்சிக் குழுவின் தலைவராக நடித்துள்ளார்.
"நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் அஞ்சனா. கல்வெட்டுகளைப் படிக்கக்கூடிய நிபுணர் கதாபாத்திரத்துடன் கச்சிதமாகப் பொருந்தி உள்ளார்.
"தொல்பொருள் துறையில் சிலைகள் ஆய்வு, ஓவிய ஆய்வு, சிதிலமடைந்த பொருள்களின் ஆயுளைக் கண்டுபிடிப்பது, கல்வெட்டு ஆய்வு என்று பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் கல்வெட்டுகளைப் படிப்பது. இந்த விவரங்களை எல்லாம் விரிவாகக் கேட்டுக்கொண்டதுடன், தான்யாவும் தன் பங்குக்கு சில விவரங்களைச் சேகரித்து, அவற்றை மனதில் வைத்து நடித்தார். அவரது இந்த அக்கறையை மொத்த படக்குழுவும் பாராட்டியது," என்கிறார் கிஷோர்.
, :
தான்யா

