போராளியாக சாய் பல்லவி

3 mins read
92895e58-4cb2-4c51-9630-3d695793d511
-

நாயகர்களுக்கு முக்கியத்துவம் தராமலும் கவர்ச்சி காட்டாமலும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் சாய் பல்லவி. அவர் நடித்து அண்மையில் வெளியான 'ஷ்யாம் சிங்கா ராய்' படத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகியாக நடித்து ரசிகர்களை மீண்டும் கவர்ந்துள்ளார்.

மருத்துவரான நடிகை சாய் பல்லவி, திரையுலகம் மீது கொண்ட ஆர்வத்தால் நடிக்க வந்தார். தமிழில் 'கஸ்தூரி மான்', 'தாம் தூம்' ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார் சாய் பல்லவி.

அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் மலர் டீச்சராக அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்ட இவர் மலையாளத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

அதையடுத்து தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் வருண் தேஜுக்கு ஜோடியாக 'ஃபிடா' என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் வாய்ப்புகள் அதிகம் வரத்தொடங்கியுள்ளன.

தமிழில் ஏஎல் விஜய் இயக்கத்தில் 'தியா' என்ற படத்தில் நடித்த சாய் பல்லவி அந்தப் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். தமிழில் மிகக் குறைந்த அளவிலேயே படங்களில் நடித்துள்ளார். அவ்வகையில் நேரடியாக தமிழில் 'மாரி 2', 'என்ஜிகே' உள்ளிட்ட படங்களில் நடித்த சாய் பல்லவி இணையத்தொடர் மற்றும் ஆந்தாலஜி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் தெலுங்கில் நடித்த 'மிடில் கிளாஸ் அப்பாயி' படத்திற்குப் பிறகு ராகுல் சங்ரிதியான் இயக்கத்தில் நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'ஷ்யாம் சிங்கா ராய்'.

இந்தப் படம் கிறிஸ்மஸ் விருந்தாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழ் காலத்தையும் முற்பிறவியையும் மையப்படுத்தி வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் முற்பிறவியில் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் நிகழ்காலத்தில் தேவதாசியாகவும் சாய் பல்லவி நடித்து சாதித்து உள்ளார்.

தனது ஒவ்வொரு படத்திற்கும் வேறுபாடு காட்டி நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கும் சாய் பல்லவி 'விராட பருவம்' என்ற மற்றொரு படத்தில் போராளியாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படவிளம்பர நிகழ்ச்சி பட வெளியீட்டிற்கு முதல் நாள் நடைபெற்றது. அந்த விழா மேடையில் பேசிய இயக்குநர் ராகுல், சாய் பல்லவியின் நடிப்புத் திறமையைப் பாராட்டினார். அதைக் கேட்டு அரங்கில் இருந்த ரசிகர்கள் எல்லாம் "சாய் பல்லவி, சாய் பல்லவி" என்று ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர்.

ரசிகர்களின் பாச மழையில் நனைந்த சாய் பல்லவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. அதைப் பார்த்த படத்தின் நாயகன் நானி எழுந்து சென்று அவரைக் கட்டிப்பிடித்து தேற்றினார்.

அரங்கில் இருந்த அனைவரும் சாய் பல்லவியைப் பாராட்ட, அதைப் பார்த்து அங்கிருந்த மடோனா செபாஸ்டியனும் கீர்த்தி ஷெட்டியும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

முன்னணி நடிகையாக வலம் வரவேண்டும் என்றால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து, நன்றாக நடித்தால் போதும் என்று தனது நடிப்பின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய்பல்லவி நேற்று முன்தினம் சிவப்பு சேலையில் பார்ப்பதற்கு மகாலட்சுமிபோல மின்னும் அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது பலராலும் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது.

விரைவில் ஆந்திராவில் `சாய் பல்லவி ஆர்மி' வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.