செய்தியாளர் மாறனாக நடிக்கும் தனுஷ்

செய்தியாளர் மாறனாக நடிக்கும் தனுஷ்

3 mins read
97d4cd99-d296-45b5-9b56-acb5ea69929c
-

கார்த்­திக் நரேன் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'மாறன்' படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார் தனுஷ். ஊடகத்­து­றை­தான் கதைக்­க­ள­மாம்.

முதன்­மு­றை­யாக தனுஷ் செய்­தி­யா­ளர் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ள­தா­கச் சொல்­கி­றார் கார்த்­திக் நரேன்.

'இந்த வகை படம்' என்று முத்­திரை குத்த இயலா­த வகையில், அடி­தடி, திகில், நகைச்­சுவை, உணர்­வு­பூர்­வ­மான காட்­சி­கள் என அனைத்து அம்­சங்­க­ளு­டன் தயா­ராகி வரு­கிறது 'மாறன்'.

"ஒரு நாண­யத்­துக்கு இரண்டு பக்­கங்­கள் இருக்­கிறது என்று சொல்­வோம். அது­போன்று எந்­த­வொரு தொழில்­நுட்­பத்­துக்­கும் சாதக, பாதக அம்­சங்­கள் இருக்­கும்.

"சமூக ஊட­கங்­களும் அப்­ப­டித்­தான். ஆனால் என்­னைப் பொறுத்­த­வரை அது ஓர் ஆயு­தம். நம்­மு­டைய தற்­காப்­புக்­கா­கப் பயன்படுத்தலாம். பிறரை அழிக்­க­வும் கைகொ­டுக்­கும்.

"அந்த வகை­யில் ஊட­கம் என்ற ஆயுதத்தை தனுஷ் எதற்கு, யாருக்­காகப் பயன்­படுத்துகி­றார், அதன் மூலம் யாரை எதிர்க்­கிறார் என்­பதை இரண்டு மணி நேரம் திரை­யில் காண்­பிக்க உள்­ளோம்.

"இந்­தப் படத்­துக்­கா­கத்­தான் தனுஷ் சாரை முதன்­மு­த­லாக சந்­தித் தேன். அவரை இயக்­கும்­போது கேம­ரா­வுக்­குப் பின்­னால் ஓர் இயக்­கு­ந­ராக மட்­டு­மல்­லா­மல், ரசி­க­னா­க­வும் அமர்ந்து கவ­னிப்­போம். பல சம­யங்­களில் காட்­சியை முடிப்­பதற்கு 'கட்' சொல்ல மறந்து போயி­ருக்­கி­றேன். அந்த அள­வுக்கு சிறப்­பான நடிப்பை வெளிப்­ப­டுத்­து­கி­றார்.

"படத்­தின் அறி­மு­கப் பாடலை­யும் அவர்­தான் பாடி­யுள்­ளார். இது ரசி­கர்­க­ளுக்கு தனி விருந்­தாக அமை­யும்," என்­கிறார் கார்த்­திக் நரேன்.

'மாறன்' படத்­தில் தனு­ஷு­டன் நாய­கி­யாக இணைந்­துள்­ளார் மாள­விகா மோக­னன். தனது பிறந்­த­நா­ளின்போது, அடுத்து தனு­ஷு­டன் நடிக்க வேண்­டும் என்று டுவிட்­டர் பதிவு ஒன்­றில் தமது விருப்­பத்தை தெரி­வித்­தி­ருந்­தார். அடுத்த வாரமே அவரை நாய­கி­யாக ஒப்­பந்­தம் செய்­தி­ருப்­பதை அறி­வித்­தது 'மாறன்' படக்­குழு.

"இதில் அவர் புகைப்­படச் செய்தி­யா­ள­ராக நடித்­துள்­ளார். அவ­ரது திற­மையை வெளிப்­ப­டுத்த நிறைய வாய்ப்­புள்ள படம் இது. அவ­ரும் இதைப் பு­ரிந்துகொண்டு காட்­சி­க­ளை­யும் வச­னங்­க­ளை­யும் நன்கு உள்­வாங்கி நடித்­துள்­ளார்.

"மொழி தெரிந்த நடி­கை­யாக இருந்­தால் படப்­பி­டிப்­பின்­போது காட்சியை மெரு­கேற்­றி­னால் அதைப் புரிந்துகொண்டு நடிக்க முடியும்.

"ஆனால் மாள­வி­கா­வுக்கு மொழி கொஞ்­சம் தடையாக இருந்­தா­லும் அதைக் காட்­டிக்­கொள்ள மாட்­டார். 'எனக்கு பத்து நிமி­டங்­கள் கொடுக்க முடி­யுமா' என்று கேட்டு நேரம் எடுத்­துக் கொள்­வார்.

"சொன்­ன­ப­டியே பத்து நிமி­டங்­க­ளுக்­குள் மெருகேற்றப்பட்ட வசனங்­களை மனப்­பாடம் செய்து வந்து, அரு­மை­யாக நடிப்­பார்," என்று சொல்­லும் கார்த்­திக் நரேன், 'மாறன்' என்ற தலைப்­பில் ஏற்­கெ­னவே ஒரு படம் வெளி­யாகி இருப்பது தமக்­குத் தெரி­யும் என்­கி­றார்.

இவ­ரது கதை­யின் நாய­கனு­டைய பெயர் மதி­மா­றன். நாய­கனின் பெய­ரைத்­தான் படத்­தலைப்­பாக வைக்க வேண்­டும் என்று தொடக்­கத்­தி­லேயே முடிவு செய்­து­விட்­ட­ன­ராம்.

"மதி என்­றால் அறிவு என்று ஒரு பொருள் உண்டு. எனது பட நாய­கன் ஒரு செய்­தி­யா­ளர். அவ­னது சாது­ரி­ய­மும் புத்­தி­சா­லித்­த­ன­மும்­தான் படத்­தின் சிறப்­பம்­சம். அத­னால்தான் 'மாறன்' என்ற தலைப்பைத் தேர்வு செய்­தோம்.

"இந்தப் படத்துக்கு மலையாள எழுத்தாளர்கள் சர்ஃபூ, சுஹாஸ், பாடலாசிரியர் விவேக் என்று மூன்று பேர் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.

"முதன் முறையாக இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன்," என்கிறார் கார்த்திக் நரேன்.