வட இந்தியாவில் இருந்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க வந்த போது காஷ்மீரா பர்தேசியை ஒருதரப்பினர் கிண்டலடித்தனர்.
'இவரெல்லாம் ஒரு மொழியில் கூட தாக்குப்பிடிக்க முடியாது' என்று கேலி செய்தவர்கள் வாய் மூடிக்கொள்வார்கள். ஏனெனில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளிலும் கால்பதித்துவிட்டார் காஷ்மீரா.
நான்கு மொழிகளிலும் இவர் நடித்துள்ள புதுப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அவற்றுள் தமிழில் 'ஹிப் ஹாப்' ஆதியுடன் நடித்துள்ள 'அன்பறிவு' படமும் ஒன்று. இந்தி, மராத்தி படங்களில் நடித்துள்ள போதிலும், தென்னிந்திய திரையுலகுதான் தமது இலக்கு என்கிறார் இந்த இளம் நாயகி.
காரணம், தென்னிந்திய மொழிகளில்தான் மிகவும் தரமான படங்கள் உருவாக்கப்படுவதாகவும் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைப்பதாகவும் சொல்கிறார்.
"மண்வாசனையுடன் கூடிய படங்களுக்கு தென்னிந்திய திரையுலகத்தில் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அத்தகைய கதைக்களங்களுடன் நம்மை பொருத்திக்கொண்டு நடிக்கும்போது இயல்பாகவே நம் திறமை வெளிப்படுகிறது.
"ஆதியுடன் நடித்த 'அன்பறிவு' படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடந்தபோது, நான் குறிப்பிட்டவற்றை தனிப்பட்ட வகையில் உணர்ந்தேன். தவிர, தென்னிந்திய திரையுலகில் நடிகைகளுக்கு நல்ல மரியாதை கிடைத்துள்ளது.
"ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனால் உற்சாகமாக நடிக்க முடிகிறது," என்று சொல்லும் காஷ்மீரா, கன்னடத்தில் நடித்துள்ள 'ரைடர்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜய் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நிகில் குமாரசாமி நாயகனாக நடித்துள்ளார். கொரோனா நெருக்கடி காரணமாக இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் இரண்டரை ஆண்டுக்காலம் நீடித்ததாம். இடைப்பட்ட காலத்தில் தனது தோற்றம் மாறிவிட்டதால் சிக்கல் ஏற்பட்டதாகச் சொல்கிறார் காஷ்மீரா.
"கதைப்படி, அமெரிக்காவைச் சேர்ந்த சௌமியா என்ற பெண் குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்காக இந்தியா வருகிறார். வந்த இடத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும், தனது கொள்கைகளையும் இலக்கையும் கைவிடாமல் போராடி வெற்றி பெறுகிறார்.
"இப்படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் சரிவிகிதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியபோது, தொடக்கத்தில் இருந்த தோற்றத்தை திரையில் கொண்டுவர சிரமப்பட்டேன். ஒரு நடிகையாக இதுவரை நான் எதிர்கொண்ட பெரிய சவால் இதுதான். மழையில் படமாக்கப்பட்ட சில காட்சிகளில் நடிப்பதும் சவாலாக இருந்தது," என்கிறார் காஷ்மீரா.
, :
காஷ்மீரா

