'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருப்பது, விஜய் சேதுபதி நாயகனாக அசத்தி இருப்பது, நயன்தாராவுக்கு இணையான கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருப்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளன.
விக்னேஷ் சிவனிடம் பேசினால் இந்தப் படத்துக்கு இயக்குநராக தாம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று இசையமைப்பாளர் அனிருத்தும் முக்கியம் என்கிறார். படத்தில் ஏழெட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளனவாம்.
"ஒரு மனிதனுக்கு இரண்டு பெண்கள் மீது உண்மையாகவே காதல் ஏற்படுமா, அந்தக் காதலின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும், அந்தக் காதல் எங்கு போய் முடியும் எனப் பல்வேறு கேள்விகள் எழும். இந்தக் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும்தான் இந்தப் படம்," என்கிறார் விக்னேஷ் சிவன்.
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தொட்டுப் பார்க்காத கதை இது என்று குறிப்பிடுபவர், முன்னுதாரணம் இல்லாததால், படத்தை முழுமையாக எடுத்து முடிக்கும் வரை எப்படி இருக்கும் என்பதை தோராயமாக அனுமானித்து வேலை பார்க்க வேண்டியிருந்ததாகச் சொல்கிறார்.
படத்தின் தலைப்பே கதையைச் சொல்வது போல் இருப்பதாக சிலர் சுட்டிக்காட்டினராம். 'அதனால் பரவாயில்லை' என்கிறார் விக்னேஷ்.
காரணம், இதுபோன்ற படங்களை, கதை தெரிந்த பிறகும் முழுமையாகப் பார்க்கும் ஆர்வம் உள்ள ரசிகர்கள் இன்றளவும் பரவலாக இருப்பதாகச் சொல்கிறார்.
"ஒருவருக்கு இரண்டு பெண்கள் மீது காதல் என்பது சிக்கலான விஷயம்தான். நடைமுறையில் எளிதில் சாத்தியமல்ல. மேலும், இரண்டரை மணி நேரம் படம் பார்க்க வைக்க வேண்டும். அது ஒரு சவால்.
"இரண்டு பெண்களை ஓர் ஆண் காதலிக்கிறார் என்று சொல்லும்போது சிலருக்கு வக்கிரமாகத் தோன்றக்கூடும். அதனால் இந்தக் கதையை சுவாரசியமாக மட்டுமல்லாமல், கவனமாகவும் சொல்ல வேண்டியிருந்தது. இப்படி பல சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்," என்று குறிப்பிடும் விக்னேஷ் சிவன், இதுபோன்ற கதைக்கு சேதுபதி போன்ற ஒரு நாயகன் இல்லாமல் திரைப்படமாக்க இயலாது என்கிறார்.
கதாநாயகன் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகிய மூவருக்கும் இடையேயான உடல் மொழிதான் இந்தப் படம் என்று கூறுபவர், மூவருமே தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக வழங்கி உள்ளதாகப் பாராட்டுகிறார்.
"முதலில் சமந்தாவைப் பாராட்ட வேண்டும். அவரது தோற்றம், நடிப்பு, வேலை மீதான அர்ப்பணிப்பு எல்லாமே பாராட்டப்பட வேண்டியவை. தனது ஒரு பார்வையால் மொத்த காட்சியையும் தன்வசம் இழுத்துவிடுவார். அவரிடம் உள்ள சிறப்பு அம்சங்களில் இருந்தும் நமக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளலாம்.
"அளவாக, இயல்பாக நடிப்பதற்கு சமந்தாதான் நல்ல உதாரணம். அதனால்தான் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் அவரால் நடிக்க முடிகிறது. முன்னணி நடிகையாகவும் இருக்க முடிகிறது.
"இந்தப் படத்தில் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மூவருக்குமே சரிவிகித முக்கியத்துவம் இருக்கும். இந்த மூவரின் கூட்டணி ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்," என்கிறார் விக்னேஷ் சிவன்.
சேதுபதி நடிப்பு எப்படி?
"நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்தப் படத்தின் நாயகன் கதாபாத்திரத்துக்கு அவரைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்த பாத்திரத்துக்கு ஒரு நடிகர் என்பதைக் கடந்து, அதை முழுமையாக உள்வாங்கும் ஆற்றல் தேவை.
"இரு பெண்களை நாயகன் காதலிப்பது தவறான ஒன்றல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக அந்த நடிப்பு அமையவேண்டும். இதைக் கச்சிதமாகச் செய்துள்ளார் சேதுபதி. அவரது தனித்தன்மையான நடிப்புதான் அவருக்கும் படத்துக்கும் பலம். ஒவ்வொரு காட்சியிலும் அவரிடம் இருந்து எதிர்பாராத ஒன்று வெளிப்படும். சேது சார் 'சூப்பர்'."
நயன்தாரா என்ன சொல்கிறார்?
"இந்தக் கதையையும் வசனங்களையும் நூறு முறையாவது நான் சொல்ல கேட்டிருப்பார். ஆனால், படப்பிடிப்பின்போது ஏதோ அப்போதுதான் புதிதாக கேட்டதுபோல் ரசித்து நடிப்பார். இதைத்தான் நிபுணத்துவம் என்கிறார்கள். அவரது நடிப்பால் மொத்தக் காட்சியும் அழகாகிவிடும்," என்கிறார் விக்னேஷ் சிவன்.

