எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் நடிக்கத் தயார் என்கிறார் ஸ்ம்ருதி வெங்கட். 'தடம்' திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு ஸ்ம்ருதியைப் பற்றி தெரிந்திருக்கும்.
இப்படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட, சூட்டோடு சூடாக தனுஷ் நடிக்கும் 'மாறன்' படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
ஸ்ம்ருதி நடித்துள்ள 'வனம்' திரைப்படம் அண்மையில் வெளியானது. இதில் அவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டுள்ளது.
ஸ்ம்ருதி வெங்கட் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தானாம். பெற்றோர் இருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள்.
"ஆனால் நான் சென்னைப் பெண்ணாகவே வளர்ந்தேன். பள்ளி, கல்லூரிப் பருவத்தை சென்னையில்தான் கழித்தேன். அதனால் தமிழில் சரளமாகப் பேச வரும்," என்கிறார் ஸ்ம்ருதி.
பிற மொழிகளில் வாய்ப்புகள் தேடிவந்தாலும் தமிழுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பதாகச் சொல்பவர், தமிழில் அண்மைக் காலமாக நாயகிகளுக்கு நல்ல, கனமான பாத்திரங்கள் அமைவதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
"ஏதோ சில காட்சிகளில் தோன்றினோம், அதற்கான சம்பளத்தைப் பெற்றோம் என்று இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.
"பெயர் அளவுக்கு கதாநாயகி என்றில்லாமல், கதையின் ஓர் அங்கமாகப் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்போது, நாம் ரசிகர்களால் கவனிக்கப்படுவோம். மேலும் மொழி தெரிந்த நடிகைகளால் அந்தக் கதையின், கதாபாத்திரத்தின் அழுத்தத்தை உணர்ந்து நடிக்க முடியும்.
"எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலான தமிழ் இயக்குநர்கள், தமிழ் பேசும் நடிகைகள் என்றால் கதையை எளிதாகப் புரியவைத்துவிடலாம் என்று தமிழ் பேசும் நடிகைகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இதற்கு முன்பெல்லாம் மும்பை, கேரளாவில் இருந்து வரக்கூடியவர்களைத்தான் நாயகிகளாக நடிக்க வைத்தனர். அந்த நிலை தற்போது மாறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்கிறார் ஸ்ம்ருதி.
'தடம்' படத்துக்கு முன்பே தமிழில் 'முண்டாசுப்பட்டி' படத்தில் நடிக்க ஸ்ம்ருதிக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அப்போது பெற்றோர் சம்மதிக்கவில்லையாம். திரை வாய்ப்புகளைவிட படிப்பை முடிப்பதுதான் முக்கியம் என்று கூறி தடை போட்டிருக்கிறார்கள். அதன் காரணமாகவே படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னர் அப்படத்தில் இருந்து விலகியுள்ளார் ஸ்ம்ருதி.
இவருக்கும் கேமரா முன்னாள் நிற்கவேண்டும் என்றதும் லேசான நடுக்கம் இருந்துள்ளது. இதையடுத்து சில விளம்பரங்களில் நடித்தபிறகு இந்த நடுக்கமும் அச்சமும் போய்விட்டதாகச் சொல்கிறார்.
பெற்றோர் விருப்பப்படியே தகவல் தொடர்புத்துறையில் மேல்படிப்பை முடித்துவிட்டார் ஸ்ம்ருதி. அதன் பிறகு அவரது நடிப்பு ஆசைக்கு யாரும் தடை போடவில்லை.
"இன்னும் சொல்லப்போனால் நான் நடித்த விளம்பரங்களைப் பார்த்தபிறகு அம்மா எனக்கு எல்லா வகையிலும் உதவிகரமாக உள்ளார். இத்தனைக்கும் நான் சினிமாவில் நடிக்க முதலில் தடை போட்டதே அவர்தான்.
"அந்த நிலைமை மாறி, நான் நடித்த படம் வெளியாகும்போது, எனது பேட்டி ஊடகங்களில் இடம்பெறும்போது தனது தோழிகளை, உறவினர்கள் தொலைபேசியில் அழைத்து பெருமையுடன் அதுகுறித்துப் பேசுவார்," என்று மகிழ்ச்சி ததும்பச் சொல்கிறார் ஸ்ம்ருதி.
அண்மையில் 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தில் சத்யராஜின் மகளாக நடித்து முடித்துள்ளார்.
சத்யராஜ் நிறைய வாசிப்பு அனுபவம் உள்ளவர் என்றும் எந்த விஷயம் குறித்துப் பேசினாலும் அதுகுறித்து ஏராளமான தகவல்கள் சொல்வார் என்றும் வியக்கிறார் ஸ்ம்ருதி.
"ஒரு மூத்த நடிகர் என்ற தலைக்கனமும் அவரிடம் துளியும் இருக்காது.
"'தடம்' படத்துக்கு அடுத்ததாக நான் நடித்த திரைப்படம் 'தீர்ப்புகள் விற்கப்படும்'. அப்போதும் நான் அறிமுக நடிகைதான். ஆனால் என்னிடமும் ஏன்... படப்பிடிப்புத் தளத்தில் அனைவரிடமும் மிகவும் இனிமையாகப் பழகினார் சத்யராஜ் சார்.
"அனைவரிடமும் தலைக்கனம் இல்லாமல் இன்முகத்துடன் பழகவேண்டும் என்பதே அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட முக்கிய விஷயம்," என்று சொல்லும் ஸ்ம்ருதி வெங்கட், அடுத்து விக்ரம் பிரபுவுடன் 'பகையே காத்திரு' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

