வைபவ் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் 'ஆலம்பனா'. 'டாக்டர்' வெற்றிக்குப் பிறகு கே.ஜே.ஆர்.ராஜேஷ் தயாரிக்கும் படம். பாரி.கே.விஜய் இயக்குகிறார். இது பூதம் பற்றிய கதையாம்.
"ஒருமுறை ரஜினி, கமல் நடித்த 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் பழம்பெரும் நடிகர் அசோகன் பூதமாக நடித்திருப்பார். அடிக்கடி 'ஆலம்பனா... ஆலம்பனா...' என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அது என்னுடைய கதைக்குப் பொருத்தமாக இருந்தது.
"நான் எதிர்பார்த்தபடியே தலைப்பை அறிவித்ததும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது முழுநீள நகைச்சுவை கதை. அதில் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை என பல விஷயங்கள் கலந்திருக்கும்.
"இந்தக் கதைக்கு சாகசங்கள் புரியும் நாயகன் தேவைப்படவில்லை. கதைக்கேற்ற, அமைதியான நாயகன் என்று முடிவானதும் முதலில் விஷ்ணு விஷாலை அணுகினோம். அவரும் இதில் நடிக்க ஆர்வமாக இருந்தார். ஆனால், கால்ஷீட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியாமல் போனது.
"அதன்பிறகு வைபவ் நினைவுக்கு வந்தார். அறிமுக இயக்குநர் என்றாலும், அவர் கொடுத்த ஒத்துழைப்பு பாராட்ட வேண்டிய ஒன்று.
"ஒருமுறை தொடர்ந்து 72 மணி நேரம் படப்பிடிப்பு நடத்தினோம். கொஞ்சமும் முகம் சுளிக்காமல் நடித்தார். ஒரு நண்பரைப் போல் பழகிய, பணியாற்றிய அனுபவத்தை எனக்குத் தந்துள்ளார்.
"முனீஸ்காந்த் தான் இந்தப் படத்தில் பூதம். அவர் எனது ஆரம்ப கால நண்பர். எனக்காக வாய்ப்பு தேடிய நல்ல உள்ளங்களில் ஒருவர்.
"கதை எழுதும்போதே அவர்தான் பூதம் கதாபாத்திரத்தை ஏற்பார் என முடிவு செய்தேன். அவரிடம் ஒப்புதலும் வாங்கிவிட்டேன்.
"அவர் கொடுத்த ஒத்துழைப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஏனெனில், பூதம் கதாபாத்திரத்துக்கான உடைகளை அணிந்துகொண்டு, ஒப்பனையுடன் பல மணிநேரம் நடிப்பது நெருப்பு மேல் நிற்பது போன்றது. இருப்பினும், தனது சிரமத்தை வெளிக்காட்டாமல் நடித்தார்.
"ஆனந்தராஜ், காளி வெங்கட், ரோபோ சங்கர் ஆகியோரின் நடிப்பு சிரிப்பை வரவழைக்கும் என்பதற்கு இப்போதே உத்தரவாதம் தருகிறேன்," என்கிறார் பாரி.கே.விஜய்.

