'கார்பன்' என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்துள்ளார் விதார்த். அவரது ஜோடியாக நடிக்க கன்னடத்தில் இருந்து தன்யா என்பவரை இறக்குமதி செய்துள்ளனர்.
'கார்பன்' என்றால் பிரதி எடுப்பது என்றுதான் நம்மில் பலர் புரிந்துகொள்வோம். அதற்கும் இந்தப் படத்தின் கதைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தவே இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்ததாகச் சொல்கிறார் இயக்குநர் சீனிவாசன்.
இதற்கு முன்பு, விஜய் ஆண்டனியை வைத்து 'அண்ணாதுரை' படத்தை இயக்கியவர். இம்முறை வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளார்.
"படத்தின் நாயகனுக்கு அடிக்கடி சில கனவுகள் வருகின்றன. அவை அனைத்தும் நிஜத்திலும் நடக்கின்றன. இந்நிலையில், தன் தந்தை விபத்தில் சிக்குவதுபோல் கனவு காண்கிறார். அதைத்தடுக்க மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்காமல் போகி றது. விபத்தை ஏற்படுத்தும் வாகனம் மட்டும் அவரது மனதில் நன்கு பதிவாகிவிடுகிறது. தந்தைக்கு உரிய சிகிச்சை அளித்துக் காப்பாற்ற பெருந்தொகை தேவைப்பட, விபத்து ஏற்படுத்தியவரை கண்டுபிடித்தால்தான் சிக்கல் தீரும் என்ற நிலை.
"வாழ்க்கையில் கடந்து போன நாளை மீண்டும் வரவழைப்பது நடக்காத ஒன்று. பத்து நொடிகள் கனவு நீடித்திருந்தால் என்னவாகி இருக்கும் என்ற கேள்வியையும் கலைந்த கனவை வரவழைக்க நடக்கும் போராட்டத்தையும் சுவாரசியமான திரைக்கதையுடன் திரையில் விவரித்திருக்கிறேன்," என்கிறார் இயக்குநர் சீனிவாசன்.
இந்தப் படத்தின் நாயகன் அமைதியான குணாதிசயம் கொண்டவன் என்பதால், விதார்த் தான் பொருத்தமாக இருப்பார் எனக் கருதினாராம். கதையைக் கேட்ட விதார்த்தும் இதில் நடிக்க தயக்கமின்றி ஒப்புக்கொண்டுள்ளார்.
"இது அவருக்கு 25வது படம். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு ரசிகர்களின் அனுதாபத்தை அள்ளும் விதமாக, மிக யதார்த்தமாக இருந்தது. தனக்கான பாத்திரத்துடன் கச்சிதமாகப் பொருந்தி உள்ளார். தன் சினிமா அறிவை வெளிப்படுத்த முயற்சி செய்யாமல், நாம் எதிர்பார்ப்பதை மட்டும் கொடுக்கிறார். அந்த வகையில் அவரை இயக்குநரின் கதாநாயகன் என்று சொல்லலாம்.
"தெலுங்கிலும் கன்னடத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் நாயகி தன்யா. இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் இடைவேளையில்தான் அறிமுகமாகும். தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புது நாயகியை அறிமுகப்படுத்தி உள்ளோம் என்பதைவிட, திறமையான நாயகியைத் தந்துள்ளோம் என்பதே சரி," என்கிறார் சீனிவாசன்.

