திரைப்படங்களில் இடம்பெறும் சில காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவரும். மிகுந்த உற்சாகத்தையும் அளிக்கும். ஆனால் அதன் பின்னணியில் திரைக்கலைஞர்கள் எந்த அளவு உழைத்து இருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
அத்தகைய ஓர் அனுபவத்தை அண்மையில் பெற்றுள்ளார் மகிமா நம்பியார். 'ஓ மை டாக்' என்ற படத்தின் படப்பிடிப்புக்காக அண்மையில் ஊட்டிக்குச் சென்றாராம். அங்கு நடுங்க வைக்கும் குளிரில் காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.
தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெற்ற படப்பிடிப்பின்போது மிகுந்த சிரமங்களுக்கு ஆளான போதிலும் காட்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள் ளதாக இயக்குநர் சொன்னதும், சோர்வும் சிரமங்களும் அடுத்த நொடியே மாயமாகிவிட்டதாகச் சொல்கிறார்.
என்ன நடந்தது என்பது குறித்து மகிமா படபடப்புடன் விவரிப்பதைக் கேட்போம்.
"படப்பிடிப்பின் முதல் நாள் அன்றே ஊட்டி குளிரை என்னால் தாங்க முடியவில்லை. இயக்குநர் சரோவ் சண்முகம் ஏற்கெனவே ஒருநாளைக் கூட வீணடிக்கக்கூடாது என்று மொத்த படக்குழுவினருக்கும் அறிவுறுத்தி இருந்தார்.
"தினமும் அதிகாலை வேளையில் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்றுவிடுவோம். சூரியன் உதிக்கும் வேளையில் இருக்கும் மங்கிய வெளிச்சத்தில்தான் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
"முதல்நாள் படப்பிடிப்பு நடந்த இடத்துக்குச் சென்றபோது குளிரில் நடுங்கியபடியே இருந்தேன். அதிகாலை குளிரை யாரால் சமாளிக்க முடியும். அன்றைய தினம் மிக முக்கியமான வசனங்களுடன் சில காட்சிகளை எடுக்க இயக்குநர் சரோவ் சண்முகம் திட்டமிட்டு இருந்தார். அதனால் அவரிடம் எனக்கான பிரச்சினைகள் குறித்துப் பேச தயக்கமாக இருந்தது.
"படக்குழுவில் மற்ற அனைவருமே கால் உறை, குளிரில் இருந்து காக்கும் சிறப்பு உடைகள், தலைக்கு குல்லா என்று தகுந்த முன்னேற்பாடுகளுடன் வந்திருந்தனர். அதனால் அவர்களால் இயல்பாக வேலை பார்க்க முடிந்தது. ஆனால் நான் அங்கு எடுக்கப்படும் காட்சிக்கான உடையை மட்டுமே அணிந்திருந்தேன். எனது சப்பாத்துகளுக்குப் பொருத்தமான காலுறைகளை எடுத்து வரவில்லை. அதனால் வெறுங்காலில் பட்ட குளிர், உச்சந்தலை வரை பாய்ந்தது.
"அப்போது எனது ஒப்பனைக் குழுவில் இருந்த உதவியாளர் ஒருவர் குளிரைச் சமாளிப்பதற்கான சிறப்பு உடை ஒன்றைக் கொடுத்தார். அதை அணிந்த பிறகு கொஞ்சம் சமாளிக்க முடிந்தது.
"இந்நிலையில், படக்குழுவைச் சேர்ந்த சிலர் ஒவ்வொரு வசனத்தையும் நான் பேசி முடித்ததும், ஓடி வந்து என்னைச் சூழ்ந்துகொள்வார்கள். ஜெர்கின், கோட் உடைகளைத் தந்து சில நிமிடங்கள் அணியச் செய்வார்கள். சூடான பானங்களும் தரு வர். அதனால்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதை அங்கு நன்றாகப் புரிந்துகொண்டேன்.
"எனக்கு சருமப் பிரச்சினை உள்ளது. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலே, ஏதாவது தொற்றுக்காளாகி அவதிப்பட நேரும். மேலும், என் முகத்தில் சிவப்பாக தடித்துவிடும். பிறகு கேமராவில் காட்டும் அளவுக்கு என் முகம் இருக்காது.
"குளிரில் எடுக்கப்பட்ட சில காட்சிகளில் நான் நீளமான வசனங்களைப் பேசி, கண்ணீர் விட வேண்டியிருக்கும் என்று இயக்குநர் சொன்னபோது அரண்டு போனேன். காரணம், குளிரில் ஒன்றிரண்டு வரிகளில் அமைந்த வசனங்களைப் பேசவே தடுமாற வேண்டியிருக்கும். இதில் நீளமான வசனங்கள், கண்களில் கண்ணீர் என்றதும் பயமாக இருந்தது.
"அந்தக் காட்சிகளைப் பலமுறை படமாக்கினோம். எப்படியோ தட்டுத்தடுமாறி, இயக்குநர் சொன்னபடி நடித்து முடித்தேன். மொத்த படக்குழுவும் என் நடிப்பைப் பாராட்டியது," என்று தமது படப்பிடிப்பு அனுபவங்களை விவரிக்கிறார் மகிமா.

