கொரோனா போராட்டத்துக்கு மத்தி யிலும் தமிழ்த் திரையுலகில் ஏதா வது பிரச்சினைகள் முளைப்பதும் அவற்றுக்கான பஞ்சாயத்து கூட்டப்படுவதும் நின்றபாடில்லை.
அந்த வகையில் அண்மையில், 'தண்ணி வண்டி' படம் தொடர்பாக ஒரு சர்ச்சை வெடித்தது.
இது நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்த படம். சில தினங்களுக்கு முன்னர் படத்தை வெளியிட்டனர்.
இந்நிலையில், திடீரென தம்பி ராமையா, உமாபதி ஆகிய இருவரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டு தனது படத்தை தோல்வியடையச் செய்ய திட்டமிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் காவல்துறையில் புகார் அளித்தார். இதனால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
படத்தின் விளம்பர நிகழ்வில் உமாபதி பங்கேற்காததுதான் பிரச்சினை ஏற்படக் காரணம்.
இதையடுத்து தம்பி ராமையாவும் அவரது மகன் உமாபதியும் வேண்டுமென்றே தன்னை கஷ்டப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவதாக தயாரிப்பாளர் சரவணன் சாடினார்.
இந்நிலையில், தம்பி ராமையா 'தண்ணி வண்டி' படப்பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
"என் மகனுக்காக எந்த இடத்திலும் நான் வாய்ப்பு கேட்டது கிடையாது. 'நீயே போ, விழுந்து எழுந்து வாய்ப்பு தேடு' என்று சொல்லிவிட்டேன். 'நான் அப்படித்தான் தேடினேன். உன் தோல்விதான் உன்னை உயர்த்தும்' என்றேன்.
"நான் இன்று நன்றாக வாழக் காரணம் இயக்குநர் பிரபு சாலமன்தான். அவருக்காக ஒரு படத்தில் நடிக்கச் சென்றிருந்தேன். அதனால் தான் 'தண்ணி வண்டி' படப் பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை. இந்தப் படத்தின் இயக்குநரிடம் முதலில் சொன்னேன். எனது மகனின் 'சிறுத்தை சிவா' என்ற படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படம் வெளியானதும் 'தண்ணி வண்டி' படத்தை வெளியிடலாம் என்று சொன்னேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
"என் மகன் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொரோனா பாதிப்பால் உடல் எடை குறைந்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது உடல்நிலை மிகவும் முக்கியம்.
"அதனால்தான் 'தண்ணி வண்டி' பட விளம்பர நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர் மீது தவறு இல்லை," என்கிறார் தம்பி ராமையா.

