பாட்டி, அம்மா, தங்கை ஆகிய மூவரும்தான் இந்த உலகில், தான் அதிகம் நேசிக்கும் உறவுகள் என் கிறார் சாய் பல்லவி (படம்).
அவருக்குப் பிடித்தமான சினிமா விமர்சகர் அவரது பாட்டிதானாம். பேத்தி நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களையும் தவறாமல் பார்த்து, மிகக் கச்சிதமாக விமர்சிப்பாராம்.
"பாட்டி என் நடிப்புக்கு மிகப்பெரிய விசிறி. என் நடிப்பைப் பாராட்டும் முதல் ஆள் பாட்டிதான். அதேபோல் எனது எண்ணங்கள், எனது கஷ்டங்கள், எனது மகிழ்ச்சித் தருணங்கள் என அனைத்தையும் அம்மாவிடம்தான் பகிர்ந்து கொள்வேன். அவரது ஆதரவு எனக்குப் பெரும் பலம்.
"தங்கையுடன் கூட அதிக நேரத்தை கழிக்க விரும்புகிறேன். தங்கையுடன் இருக்கும்போது எந்தவித கவலையும் மனதில் ஏற்படாது. இந்த மூன்று உறவுகளும் இல்லாமல் என் வாழ்க்கை முழுமை அடையாது," என்கிறார் சாய் பல்லவி.
பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு என்று நடிகை ஓவியா (படம்) தெரிவித்துள்ளார். இந்தியாவில் இனி பெண்கள் சிறு வயதிலேயே பல விஷயங்களைத் தியாகம் செய்து பெரும் பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய அவசியம் எழாது என்று அண்மையில் சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். "வாழ்க்கையில் சாதித்துக்காட்ட பெண்களுக்கும் உரிய கால அவகாசம் தேவை. எனவேதான் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்ற வாதத்தை நான் வலுவாக ஆதரிக்கிறேன்," என்கிறார் ஓவியா. பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் குண்டர் கும்பலைச் (கேங்ஸ்டர்) சேர்ந்தவராக நடிக்க உள்ளார் சூர்யா (படம்). அவர் ஏற்கெனவே 'நந்தா', 'ஆறு', 'அஞ்சான்' உள்ளிட்ட படங்களில் குண்டர் கும்பலின் முக்கியமான உறுப்பினராக நடித்துள்ளார். தற்போது 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்து வெற்றிமாறன் இயக்கும் 'வாடி வாசல்' படத்தை முடிக்க உள்ளார். அதன் பிறகு சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

