தமிழில் இரண்டு படங்களில்தான் நடித்துள்ளார் நிதி அகர்வால். அதற்குள் அவரைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள்.
அவரும் சிம்புவும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்த தகவல்களை இரு வருமே மறுக்கவில்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை.
அப்படியானால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று குறிப்பிட்டு, இதற்கு முன்பு திரையுலகில் நீண்ட காலம் மௌனம் காத்துவிட்டு, திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடிகளைச் சில ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இந்நிலையில், கிசுகிசுக்களை தாம் அறவே கண்டுகொள்வதில்லை என்கிறார் நிதி. அண்மைய பேட்டி ஒன்றில், தம்மிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் சில வார்த்தைகளில் மட்டும் சுருக்கமாகப் பதிலளித்துள்ளார்.
"நம்மைப் பற்றி எப்போதும் ஏதாவது எழுதப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். ஊடகங்களில் வெளிவரும் செய்திகளில் ஒருசில விஷயங்கள் உண்மையாக இருக்கலாம், சில உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கக்கூடும். ஆனால் நாம் பதறத் தேவையில்லை. ஏனெனில் எது உண்மை, எது உண்மைல்ல என்பது நம் பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டும். நமக்கு அது மட்டும்தான் முக்கியம்.
"என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு கிசுகிசுவுக்கும் பதில் அளித்துக் கொண்டிருக்க இயலாது. அது நேரத்தை வீணடிக்கும் செயல். எதிலும், இறுதியாக நம்முடைய உழைப்புதான் வெற்றி தரப்போகிறது. நம்முடைய உழைப்புதான் வதந்தி பரப்புகிறவர்களுக்கும் சரியான பதிலடி. அவ்வாறு நடப்பதற்காகத்தான் காத்திருக்கிறேன்," என்கிறார் நிதி அகர்வால்.

