சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான் தமது நீண்டநாள் கனவு என்கிறார் நிதி அகர்வால்.
அதற்குத் தேவைப்படும் அடிப்படைக் கட்டமைப்புகளை அமைத்து வருவதாகவும் கூறுகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன. நிதி அகர்வாலைப் பொறுத்தவரை, சின்ன படம், பெரிய படம் என்றெல்லாம் திரைப்படங்களைப் பிரித்துப் பார்க்கத் தேவை இல்லை என்கிறார்.
"எனது குடும்பத்தினர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சிறு வயது முதல் அவர்களைப் பார்த்து வளர்ந்ததால் எனக்கும் இயல்பாகவே தொழில் முனைவராக வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டது.
"தொழில் நிர்வாகம் தொடர்பாக பட்டப்படிப்பை முடித்திருக்கிறேன். எனவே, எனக்கான சொந்த நிறுவனத்தை தொடங்கவும் அதற்குத் தேவைப்படும் அனைத்து ஏற்பாடுகளையும் நானே தனித்துச் செய்யவேண்டும் என்பதும் எனது விருப்பம்," என்று சொல்லும் நிதி அகர்வால், தமது நிர்வாகத்தின் கீழ் தொண்டூழிய அமைப்பு ஒன்றை உருவாக்கி நல்ல காரியங்களைச் செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார்.
ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்துபவர், கொரோனா வேளையில் ஏராளமான மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகக் கவலைப்படுகிறார்.
"நடிப்பு என்பது சொல்லிக்கொடுத்து வருவதில்லை. நடிப்பு என்பதைக் கற்றுக்கொள்ள முடியாது. அது உணர்வுபூர்வமான ஆற்றல். நடிப்பு என்பதை நாம் மனதால் உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஓர் அனுபவம்.
"மேலும், நடிப்புத் திறமை என்பது இயல்பாக, தன்னால் வெளிப்பட வேண்டும். இயக்குநரால் மட்டுமே நம் திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வர இயலாது," என்கிறார் நிதி அகர்வால்.
தற்காப்புக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள இந்த இளம் நாயகிக்கு அடிதடியும் அதிரடியும் நிறைந்த படங்களில் நடிக்கும் ஆசையும் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால், தம்மை அதிரடி நாயகியாக நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என நம்புகிறாராம்.
"திரையுலகில் கால்பதிக்கும் முன்பே எனக்கு இந்த ஆசை இருந்தது. என்றேனும் ஒருநாள் அத்தகைய வாய்ப்பு அமையும் என நம்புகிறேன். அதனால்தான் தகுந்த உடற்பயிற்சி மேற்கொண்டு எனது உடல்வாகு கச்சிதமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். என்னை நம்பி களமிறங்குபவர்களுக்கு தாராளமாக கால்ஷீட் தருவேன்.
"பெண்கள் தற்காப்புகளில் ஏதாவது ஒன்றை கற்றுத் தேறவேண்டும். இன்றைய உலகச்சூழலில் இது மிகவும் அவசியம்," என்று சொல்லும் நிதி அகர்வால், தெலுங்கில் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளதாகத் தகவல்.
தமிழ், தெலுங்கு ரசிகர்கள் தன் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருப்பதற்கும் என முடிவு செய்துள்ளாராம்.
"நான் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தேன். அதனால் தெலுங்கில் சரளமாகப் பேச முடியும். மற்ற மொழிகளில் நடிக்கும்போது, வசனங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதன் பிறகே நடிப்பேன்.
"இளையர்கள் எந்தத் துறையாக இருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். தொண்டூழிய அமைப்புகளில் நிறைய இளையர்கள் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
"பரபரப்பான சினிமா வாழ்க்கையில் இதுபோன்ற நல்ல விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. எனினும், நான் தொடங்கும் சமூக சேவை அமைப்பின் மூலம் இயன்றவரை மக்களுக்கு உதவுவேன்," என்கிறார் நிதி அகர்வால்.
தெலுங்கில் இவர் நடித்துள்ள இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன. அதன் பின்னர் தமிழில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாகச் சொல்கிறார் நிதி அகர்வால்.

