விஷாலின் அடுத்த படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி உள்ள 'வீரமே வாகை சூடும்' என்ற அந்தப் படத்தை தயாரித்திருப்பதும் விஷால்தான்.
அண்மையில் இப்படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய விஷால், சரவணன் இயக்கிய 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற குறும்படத்தைப் பார்த்த பிறகே அவருடன் பணியாற்ற விரும்பியதாகக் குறிப்பிட்டார்.
"அந்தக் குறும்படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதன் காட்சி அமைப்பும் பிடித்திருந்ததால் அவரைத் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தேன்.
"நல்ல கதைகள் இருப்பின் எனக்குச் சொல்லும்படி கேட்டுக்கொண்டதன் விளைவுதான் இந்தப் படம். இதில் எனக்கு கதையைவிட, சரவணன் அமைத்துள்ள திரைக்கதைதான் மிகவும் பிடித்திருக்கிறது.
"புது இயக்குநருக்குள் இருக்கும் வெறியும் வேகமும் அவரிடம் உள்ளன. அதைப் பயன்படுத்தி ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறேன்.
"சரவணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை," என்றார் விஷால்.
புது இயக்குநரின் படத்தில் நடிப்பது என முடிவு எடுத்துவிட்டால், யுவன் சங்கர் ராஜாதான் இசைஅமைப்பாளர் என்று கூறுவது இவரது வழக்கமாம். அந்த வகையில் 'வீரமே வாகை சூடும்' படத்துக்கும் யுவன்தான் இசையமைத்துள்ளார்.
யுவனிடம் அனுமதி பெறாமலேயே தனது படத்துக்கு அவர்தான் இசையமைக்கிறார் என்று அறிவிக்கும் அளவுக்கு தமக்கு யுவனிடம் உரிமையும் நட்பும் இருப்பதாகக் குறிப்பிட்ட விஷால், யுவன் இசையமைக்கும் அனைத்துப் பாடல்களுமே ரசிகர்களைக் கவரக்கூடியவை என்றார்.
"இப்படத்தின் கதாநாயகி டிம்பிளை யாரும் நேரில் பார்க்கவில்லை. ஒரு விழாவில் அவர் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கிடைத்தன. அவற்றைப் பார்த்துதான் படத்துக்கு ஒப்பந்தம் செய்தோம். தமிழ் சினிமா அவருக்கு உரிய வரவேற்பை அளிக்கும் என நம்புகிறோம்.
"பொதுவாக நாயகனை மையப்படுத்தி உருவாகும் ஒருசில படங்களே வெற்றிபெறும். ஆனால் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனைத்துப் படங்களுமே வெற்றிபெறும். அந்த வகையில் இந்தப் படமும் வெற்றிபெறும் என நம்புகிறேன்," என்றார் விஷால்.
முன்னதாக பேசிய இயக்குநர் சரவணன், படநாயகன் விஷாலின் ஆதரவு இல்லை என்றால், தமக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது என்றார்.
இதற்காக நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், விஷாலிடம் கதையைச் சொன்ன கையோடு, யுவன் சங்கரிடம் விவரித்ததாகச் சொல்கிறார்.
"யுவன் சாரிடம் சுமார் 30 நிமிட கதை என்று குறிப்பிட்டுத்தான் விவரிக்க ஆரம்பித்தேன்.
"ஆனால் ஒன்றரை மணி நேரம் ஆனது. அவருக்கு கதை பிடித்திருக்கிறது என்பதை விஷால் சார்தான் தெரியப்படுத்தினார்.
"யுவனின் நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள் என்று அவர் சொன்ன அறிவுரை இந்த நிமிடம் வரை என் மனதில் அப்படியே உள்ளது.
"அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருப்பதாக நம்புகிறேன்," என்றார் இயக்குநர் து.ப.சரவணன்.
விஷால்
, :

