அண்மையில் வெளியீடு கண்ட 'புஷ்பா' படத்தில் இடம்பெறுள்ள 'சாமி... சாமி..' எனத் தொடங்கும் பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து, திரையுலகப் பிரபலங்கள் அந்தப் பாடலுக்கு நடனமாடி, காணொளியாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகை யாஷிகா ஆனந்த் இந்தப் பாடலுக்கு நடனமாடி ஒரு காணொளியை சமூக வளைத்தலப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது நடனம் நன்றாக இருப்பதாகப் பலரும் பாராட்டி உள்ளனர்.
'பிக்பாஸ்' தமிழ் ஐந்தாம் பகுதியின் வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது நகைச்சுவை உணர்வும் பொறுமையான செயல்பாடு களும்தான் வெற்றி அளித்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். 'நட்புன்னா என்னன்னு தெரியுமா?' என்ற படத்திலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் ராஜு. 'பிக்பாஸ்' வெற்றி தமக்கு புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறாராம்.
அனுஷ்கா நடிப்பில் வெளியான 'அருந்ததி' படம்தான் அவரை முன்னணி நடிகையாக உயர்த்தியது. அந்தப் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், "அருந்ததி போன்ற கதாபாத்திரம் வாழ்க்கையில் ஒருமுறைதான் அமையும். நான் கொடுத்து வைத்தவள்," என தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் அனுஷ்கா.
'மாநாடு' படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ளது 'மன்மத லீலை'. கிட்டத்தட்ட பாக்யராஜ் இயக்கிய 'சின்ன வீடு' படத்தின் இரண்டாம் பாகம்போல் இருக்குமாம். அதில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார். படத்தை ஓடிடியில் வெளியிடுவதாக முன்பு திட்டமிட்டிருந்தனர். இப்போது அதை மாற்றி நேரடியாக திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளனராம்.

