நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் என்று தனுஷின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.
எனினும், இது எல்லா குடும்பங்களிலும் கணவன், மனைவி இடையே நடக்கக்கூடிய வழக்கமான சண்டைதான் என்றும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் ஹைதராபாத்தில் நடைபெறும் 'வாத்தி' படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஐஸ்வர்யா தன் தந்தை ரஜினி வீட்டில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், அவரும் ஹைதராபாத்தில்தான் உள்ளார் என கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.
"தனுஷும் ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக்கொண்டது உண்மைதான். ஆனால், இருவரும் விவாகரத்து செய்யவில்லை. இருவருமே இப்போது சென்னையில் இல்லை. ஹைதராபாத்தில் இருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.
"அப்போது இருவருக்கும் சில அறிவுரைகளைக் கூறினேன். இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் வழக்கமாக கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் சண்டைதான்," என்று கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் தன் தம்பி தனுஷை சமாதானப்படுத்த முயன்று வருவதாக கூறப்படுகிறது. தனுஷ் சென்னை திரும்பியதும் இரு குடும்பத்தாரும் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாம்.

