தான்யா பாலகிருஷ்ணனை தமிழ் சினிமா ரசிகர்கள் பல திரைப்படங்களில் பார்த்திருக்க முடியும். நாயகியின் தோழியாக தலைகாட்டி இருப்பார்.
'ஏழாம் அறிவு', 'நீதானே என் பொன்வசந்தம்' 'ராஜா ராணி' உள்ளிட்ட படங்களில் அவருக்கு தோழி கதாபாத்திரம்தான் அமைந்தது. இப்போது தான்யாவும் கதாநாயகியாகி விட்டார். 'கார்பன்' படத்தின் மூலம் அவருக்கு கதாநாயகி என்ற மதிப்பு கிடைத்துள்ளது.
இந்தப் புத்தாண்டில் தமக்கு இதைவிட மகிழ்ச்சி தரும் விஷயம் இருக்க முடியாது என்கிறார் தான்யா. தமிழில்தான் கதாநாயகியாவதற்கு இத்தனை காலமானதாம். தெலுங்கில் ஏற்கெனவே மூன்று படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
"தமிழில் எனக்குரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதில்தான் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தேன். பல வருட காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
"தொடர்ந்து தோழி கதாபாத்திரங்களுக்கு மட்டுமே என்னை அழைத்து வந்தனர். நம்மை மதித்து அழைக்கிறார்களே என்பதற்காக நானும் மறுப்பு தெரிவிக்காமல் நடித்து வந்தேன்.
"இந்தச் சமயத்தில்தான் தெலுங்கில் 'செகண்ட் ஹேண்ட்' பட வாய்ப்பு அமைந்தது. அதில் எனது நடிப்பு பாராட்டப்பட்டதை அடுத்து கன்னட, மலையாளப் பட வாய்ப்புகளும் கிடைத்தன. தமிழில் கார்பன் படம் எனது கதாநாயகி ஏக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது," என்கிறார் தான்யா.
'கார்பன்' படத்தில் விதார்த் தான் நாயகன். அவரது நடிப்பு ராட்சசன் என்று வர்ணிக்கிறார்.
"விதார்த்துடன் நடிப்பது பெரும் சவால். குறிப்பிட்ட ஒரு காட்சியில் சாதாரணமாகப் பேசிக்கொண்டே இருக்கும்போது, திடீரென அழ வேண்டும் என்றார் இயக்குநர். அந்தக் காட்சியில் ஒரே டேக்கில் நடித்து முடித்தார்.
"அவருக்கு அதிக வயதாகிவிடவில்லை. இன்னும்கூட அவர் இளையர்தான். ஆனால் நடிப்பில் அலாதியான பக்குவம் தெரிகிறது. இப்படித்தான் நடிப்பேன் என்று நிபந்தனை எல்லாம் விதிப்பதில்லை.
"நன்றாக நடிக்க வாய்ப்பு இருந்தால் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்கத் தயார். அவர் நடிப்பதைப் பார்த்து பயந்து போய் நான் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தேன்," என்கிறார் தான்யா.
என்னதான் கதாநாயகியாக உயர்ந்துவிட்டாலும்கூட, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதைக் கைவிடமாட்டாராம். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் தயக்கமின்றி ஏற்பாராம்.
"அதே சமயம் எனது கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்வேன். இனி ஏனோதானோ என்று அனைத்து வாய்ப்புகளையும் ஏற்க இயலாது. அப்போதுதான் ரசிகர்கள் ஆதரவை தக்கவைத்துக்கொள்ள முடியும்," என்று சொல்லும் தான்யாவுக்கு பிடித்த நடிகர் சூர்யா.
அவருடன் ஒரு படத்திலாவது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறார்.
நயன்தாராவும் ஐஸ்வர்யா ராஜேஷும் தான்யாவின் மனம் கவர்ந்த நாயகிகள். இருவரும் வித்தியாசமான கதைக்களங்களில் நடிப்பதும் தனித்துவமான பாத்திரங்களை தேர்வு செய்வதும் தம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்கிறார்.
"எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை இருவரும் அழகாக மெருகேற்றுகிறார்கள். அவர்களுடைய வழியைத்தான் பின்பற்ற வேண்டும் என விரும்புகிறேன்.
"அதேபோல் விஜயசாந்தி மேடம் நடிப்பதை நிறுத்திவிட்ட நிலையில், அவரது இடம் இன்னும் காலியாகவே இருக்கிறது. அதிரடி படங்களில் அவரைப் போன்று சண்டை போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.
"அவர் நடித்த சில படங்களை மறக்கவே இயலாது. அதிரடி நாயகி என்றாலே அவர்தான் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார்.
"சிறு வயது முதலே நான் அவரது ரசிகை.
"அதனால் தான் அவரைப் போன்று நாயகியை மையப்படுத்தி உருவாகும் ஆக்ஷன் படத்தில் நடிக்க விரும்புகிறேன்," என்று சொல்லும் தான்யா, தற்போது பிரசன்னாவுடன் ஓர் இணையத் தொடர், தெலுங்கில் ஒரு திரைப்படம், இணையத்தொடர், மலையாளத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பல வாய்ப்புகளை ஏற்று நடித்து வருகிறார்.
நல்ல கதையம்சம் உள்ள படைப்புகள், நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் ஒதுக்க தாம் தயார் என்கிறார் தான்யா.

