திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

1 mins read

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடிகர்கள் செல்வராகவன், எஸ்.வி.சேகர், ஜெயராம் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மூவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளதாக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஓமிக்ரான் அலை காரணமாக திரையரங்குகளில் 50 விழுக்காட்டு இருக்கைகள் மட்டும் அனுமதித்ததால் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் மார்ச் 18ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

திண்டிவனத்தில் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்கு திடீரென சென்று, ரசிகர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. நூற்றுக்கணக்கானவர்கள் கூடி இருந்த அந்த திருமண விழாவில், திடீரென மேடைக்குச் சென்று மணமக்களை வாழ்த்தி உள்ளார் விஜய் சேதுபதி. மணமகன் புகழேந்தியைக் கட்டி அணைத்து, கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அதனால் மகிழ்ச்சியில் மணக்கோலத்தில் இருந்த புகழேந்தியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

எம்.ஜி.ஆருடன் 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் 'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன். அவர் மாம்பழம் வேண்டும் என்றார்,' என்ற பாடலில் நடித்தவர் நடிகை ரத்னா. இவர் சென்னை பாலவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக தனது 74வது வயதில் காலமானார். அவருக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.