சன் பிக்சர்ஸ் தயாரிக்க, பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'எதற்கும் துணிந்தவன்'.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகிறது இப்படம்.
இந்தக் கதையில் பல திருப்பங்கள் உள்ளன என்றும் சூர்யாவின் நடிப்பு தம்மை வியக்க வைத்தது என்றும் சொல்கிறார் பாண்டிராஜ். இந்தத் தலைப்பை தேர்வு செய்ததற்கான காரணத்தையும் அண்மைய பேட்டியில் அவர் விவரித்துள்ளார்.
"ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் ஏதேனும் ஒரு விஷயம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், எல்லோராலும் சரியான முடிவை எடுக்க முடியாது.
"இந்தக் கதையின் நாயகனும் இப்படியொரு சூழ்நிலையை எதிர்கொள்கிறான். அப்போது தன் முடிவால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து கவலைப்படாமல் எதற்கும் துணிந்தவனாகச் செயல்படுகிறான். அதனால் இந்தத் தலைப்பு கதையுடன் இயல்பாகவே பொருந்திப்போகிறது. கதையோட்டமும் அப்படித்தான் இயல்பாக இருக்கும்.
"'எதற்கும் துணிந்தவன்' என்றால் நல்ல விஷயத்துக்காக எந்த நிலைக்கும் போகக்கூடியவன். சொந்தங்களுக்காகவோ மக்களுக்காகவோ தான் சார்ந்த ஊருக்காகவோ நல்லது நடக்கும் என்றால் எதையும் செய்யத் தயங்காதவன் என் கதையின் நாயகன்.
"அவனது இந்த குணாதிசயத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு தலைப்பு தேவைப்பட்டது. அந்த வகையில் இந்தக் கதைக்கும் சூர்யா சாருக்கும் பொருத்தமான தலைப்பு இது," என்கிறார் பாண்டிராஜ்.
இது சூர்யாவின் ரசிகர்களை மட்டுமல்லாமல், குடும்பமாகச் சென்று படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்ற மாதிரியான படைப்பாக இருக்கும் என்று குறிப்பிடுபவர், தாம் இயக்கிய படங்களில் இருந்து வெகுவாக மாறுபட்ட படமாக இது இருக்கும் என்கிறார்.
"இது கண்டிப்பாக சூர்யாவின் படமாகவே இருக்கும். ஆனால், எனது படங்களின் மற்ற கதாநாயகர்களிடம் இருந்து மாறுபட்டு இருப்பார் சூர்யா.
"முதன்முறையாக எனது படத்தில் அதிக சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சூர்யாவின் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கொண்டாட்டம் நிறைந்த படமாக இருக்கும். அதேசமயம், எனது படங்கள் அனைத்துமே குடும்ப ரசிகர்களுக்கானவை. அதனால் அவர்களும் மனநிறைவு கொள்ளும் வகையில் இருக்கும்," என்கிறார் பாண்டிராஜ்.
பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற தோற்றம், இளையர்களைக் கவரும் அழகு என்ற விதிமுறைகளுக்கு ஏற்றவராக கதையின் நாயகி பிரியங்கா அமைந்தார் என்றும், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறமை அவரிடம் உள்ளதாகவும் பாண்டிராஜ் பாராட்டுகிறார். அவருக்கும் சூர்யாவுக்கும் இடையேயான காதல் காட்சிகள் அனைவராலும் ரசிக்கும்படி இருக்கும் என்றும் சொல்கிறார்.
இந்தப் படத்தில் சூர்யாவுடன் மோதும் வில்லன் வினய். வலுவான நாயகனுக்கு எதிரான ஒரு வில்லன் தேவை என்று யோசித்தபோது வினய்தான் தனது நினைவுக்கு வந்ததாகச் சொல்கிறார் பாண்டிராஜ்.
"அழுத்தமான கதையில் நாயகன் அளவுக்கு வில்லன் கதாபாத்திரமும் வலுவாக இருக்க வேண்டும். எனவே, வினய் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தேன். மேலும், இதுவரை வராத வில்லனாகவும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.
"வினய்யைப் பொறுத்தவரை அவருடனான முதல் சந்திப்பிலேயே என்னைக் கவர்ந்துவிட்டார். அவரது நடிப்பு மட்டுமல்ல, குரலும் வசீகரிக்கும். முதல் நாள் படப்பிடிப்பின்போதே எங்களது தேர்வை அவர் நியாயப்படுத்திவிட்டார்.
"நாம் எல்லாம் தேர்வில் நூற்றுக்கு 35 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். 85 மதிப்பெண்கள் பெற்றால்தான் அங்கீகாரம் கிடைக்கும்.
"அந்த அளவுக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று சூர்யா சார் அடிக்கடி சொல்வார். ஒவ்வொரு படத்தின் வெற்றிக்காகவும் கடுமையாக உழைக்கிறார். அந்த உழைப்பு என்னை வெகுவாக கவர்ந்துள் ளது," என்கி றார் பாண்டிராஜ்.

