15 ஆண்டுகளுக்குப் பின் தீர்ந்த ‌நடிகையின் முத்த விவகாரம்

15 ஆண்டுகளுக்குப் பின் தீர்ந்த ‌நடிகையின் முத்த விவகாரம்

1 mins read
f96a7b26-88ee-41b8-829e-cd1e926f7ac0
படம்: ராய்ட்டர்ஸ் -

பொது இடத்தில் முத்தம் கொடுத்த வழக்கில் இருந்து 46 வயது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை மும்பை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற 'ஏய்ட்ஸ்' விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் ஷில்பா ஷெட்டி, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழா மேடையில் நின்றுகொண்டிருந்த ரிச்சர்ட் கேர், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஷில்பா ஷெட்டியை கட்டிணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இதனால் ஷில்பா ஷெட்டி அதிர்ச்சியுற்றாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிரித்தபடி நின்றார். இந்தச் சம்பவத்திற்கு இந்தியாவில் பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக ஷில்பா ஷெட்டிக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன. அவர்மீது வழக்குகளும் தொடரப்பட்டன. இதுதொடர்பாக ராஜஸ்தானில் பதிவான வழக்கு, பின்னர் மும்பை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை இழுத்தடித்து வந்தது.

விசாரணை நிறைவில், இந்த வழக்கில் இருந்து ஷில்பா ஷெட்டியை நீதிமன்றம் கடந்த வாரம் விடுவித்தது.

"இதுதொடர்பான நீதிமன்ற தீர்ப்பில், "இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரிச்சர்ட் கேரின் செயலால் ஷில்பா ஷெட்டி பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் ஷில்பா ஷெட்டிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றே தெரிகிறது. எனவே, அவர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.