ரியா சுமனை தமிழ் ரசிகர்கள் மறந்து போயிருக்க வாய்ப்புண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜீவாவுடன் 'சீறு' படத்தில் நடித்தவர்.
இப்போது சந்தானத்தின் 'ஏஜென்ட் கண்ணாயிரம்', வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வனுடன் 'மன்மத லீலை' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஏஜென்ட் சாய் சீனிவாசா ஆத்ரேயா' என்ற படத்தின் தமிழ் மறுபதிப்பாக உருவாகி உள்ளது சந்தானத்தின் புதுப்படம். இதில் துப்பறியும் நிபுணராக நடித்துள்ளார் சந்தானம். கதைப்படி அவரது உதவியாளராக நடிக்கிறார் ரியா சுமன்.
"என்னதான் மறுபதிப்பு படம் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப பல மாற்றங்களைச் செய்துள்ளார் இயக்குநர் மனோஜ். சந்தானத்தை திரையில் பார்க்கும்போது அவரிடம் ஏதோ ஒரு வித்தியாசம் தென்படுவதை ரசிகர்களால் கவனிக்க இயலும்.
"எனக்கு வலுவான கதாபாத்திரம் அமைந்துள்ளது. இயக்குநர் கதையை விவரிக்கும்போதே அதை என்னால் உணர முடிந்தது. தெலுங்குப் பதிப்பை பார்க்கவேண்டாம் என்று இயக்குநர் அறிவுறுத்தினார். அதனால் பார்க்கவில்லை. படப்பிடிப்பு தொடங்கிய பிறகே சில காட்சிகளை மட்டும் பார்த்தேன்.
"சந்தானத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது நகைச்சுவையை சொல்லிக் கொண்டிருப்பார். அவர் வசனம் பேசத் தொடங்கியதுமே நமக்கு சிரிப்பு வந்துவிடும். அதேசமயம் முக்கியமான, உணர்வுபூர்வமான காட்சி என்றால் சட்டென அதற்கேற்ப மாறிவிடுவார்.
"உடன் நடிப்பவர்களின் முகபாவனைகள், நடிக்கும் விதம், தமக்கான வசனங்கள் என அனைத்தையுமே கூர்ந்து கவனிக்கிறார். எதையும் உடனுக்குடன் கிரகிக்கும் திறமை அவரிடம் அதிகம் உள்ளது. அதனால்தான் வெற்றிகளைப் பெற முடிகிறது," என்கிறார் ரியா சுமன்.
சந்தானத்தின் திறமைகள் மட்டுமல்லாமல் அவரது ஆன்மிகச் சிந்தனையும் இவரை வெகுவாகக் கவர்ந்துள்ளதாம். காரணம் ரியாவும் ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ளவர்.
"சந்தானம் ஒரு சிவபக்தர். ஈஷா யோகாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தத் தகவல்கள் எல்லாம் படப்பிடிப்பு இடைவேளையில் அவருடன் பேசியபோது தெரியவந்தது. ஆன்மிகம் குறித்து நிறைய தெரிந்து வைத்துள்ளார்.
"அதனால் அவருடன் பேசும்போது அலுப்பு தட்டாது. பல புதிய விஷயங்களை அவரிடம் இருந்து தெரிந்துகொண்டேன்," என்று சொல்லும் ரியா சுமன், 'மன்மத லீலை' படம் இளையர்களை வெகுவாகக் கவரும் என்கிறார்.
படத்தில் இவரது கதாபாத்திரம் என்ன என்பது குறித்து யாருக்கும் விவரம் தெரிவிக்கக் கூடாது என இயக்குநர் வெங்கட்பிரபு கூறியுள்ளாராம்.
கடந்த காலம், நிகழ்காலம் என இரு வெவ்வேறு தளங்களில் கதையை நகர்த்திச் சென்றுள்ளாராம் இயக்குநர்.
"எனது கதாபாத்திரம் நிகழ்காலத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும். வெங்கட்பிரபு என்னைப் பொறுத்தவரை மிகச்சிறந்த அறிவாளி என்பேன்.
"படப்பிடிப்பின்போது கலகலப்பாக வலம் வருவார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
"அது முற்றிலும் உண்மை என்பதை அவருடன் இணைந்து பணியாற்றியபோது தெரிந்துகொண்டேன்.
"காட்சிகளை மிக வேகமாகப் படமாக்குவார்," என்று பாராட்டும் ரியா, அடுத்து இரண்டு தெலுங்குப் படங்களில் நடிக்கிறார்.
தமிழில் நடித்து முடித்துள்ள இரு படங்களும் வெளியான பிறகுதான் புதுப்பட வாய்ப்புகளை ஏற்க உள்ளார்.
"தமிழ், தெலுங்கு மொழிகளில் இப்போது தரமான படங்கள் வெளிவருகின்றன. தவிர, ஓடிடி தளங்களின் வளர்ச்சியும் அவற்றில் வெளிவரும் இணையத்தொடர்களின் தரமும் கண்கூடாகத் தெரிகின்றன.
"அதனால் என் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் அமையும் என நம்புகிறேன். விரைவில் சில அறிவிப்புகளை வெளியிடுவேன்," என்கிறார் ரியா சுமன்.
படங்களில் நடிக்க அதிக சம்பளம், குறைவான கால்ஷீட் என இவர் நிபந்தனைகள் ஏதும் விதிப்பதில்லை.
தமக்கான கதாபாத்திரம் நன்றாக இருந்தால் மட்டும் போதும் என்கிறார். அதனால் ரியாவுக்கு நிச்சயம் நல்ல வாய்ப்புகள் தேடிவரும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

